தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் பணிக்கு நடத்தப்படும் நேர்முக தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மீன்வள பொறியியல் பிரிவு, மீன் வள அறிவியல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றது. இப்பணிக்கு விண்ணப்பித்தும், நேர்காணலுக்கு அழைப்பு கடிதம் வரவில்லை எனக் கூறி சேலத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன், யுவராஜ், சோனியா உள்ளிட்டோரும் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
நேர்காணலில் இடம்பெறுபவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை நிர்ணயிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், பல்கலைக்கழகம் தேவைக்கேற்ப விதிகளை மாற்றியமைத்துள்ளதாகவும், வரும் 12-ம் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு தன்னை அனுமதிக்கவேண்டும் என மனுவில் கோரியுள்ளனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி தண்டபாணி, வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் மனுதாரர்களை அனுமதிக்க வேண்டும் எனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை உதவி பேராசிரியர் நேர்முகதேர்வு தொடர்பான முடிவுகளை வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.