அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் எடுக்கப்படும் படங்களை, குறிப்பாக மாணவிகள், ஆசிரியைகள் இருக்கும் படங்களைச் சமூக ஊடகத்தில் பயன்படுத்தக் கூடாது என்றும், இதைத் தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாகச் செய்திகள் வந்தன.
பள்ளிக் கல்வி
மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் பாதுகாப்பு கருதியே இந்த அறிவிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, அவற்றுக்குத் தேவையான சில அடிப்படை விஷயங்களைச் சமூக ஊடகம் வழியாகத் தெரிவித்து, உதவுமாறு ஆசிரியர்கள் கேட்பார்கள். அதன்வழியே கிடைக்கும் பொருளாதாரத்தை வைத்து, அத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்வர். இந்த அறிவிப்பு அதற்கு இடையூறாக அமைந்துவிடுமோ என்று சில ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பு பற்றிய செய்திகள் சமூக ஊடகத்தில் பரவியதே தவிர, இதன் முறையான அரசாணை (G.O) எங்கும் பகிரப்படவில்லை. எனவே, இந்த அறிவிப்பு உண்மையில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக வெளியிடப்பட்டதுதானா என்பதைத் தெரிந்துகொள்ள பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் வாசுவைத் தொடர்புகொண்டோம்.
அரசுப் பள்ளி
அறிக்கை தொடர்பான விவரங்களைக் கேட்டுக்கொண்டவர், ``எங்கள் துறை சார்பில் யாரும் அவ்வாறு அறிக்கை ஏதும் அளிக்கவில்லை" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.