மதுரை : தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 2500 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பையடுத்து கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவர் சேர்க்கையை நீட்டிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாநில அளவில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள 2500 அலுவலக பணியிடங்கள் அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு மையம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியானது.இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆக.,27 மாநில கூட்டுறவு பதிவாளர் வெளியிட்ட உத்தரவில் ”2019 -2020ல் (நடப்பாண்டில்) கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் வழி, தொலைதுாரக் கல்வி அல்லது நேரடி பட்டய பயிற்சி படிக்கும் மாணவரும் விண்ணப்பிக்கலாம்’ என திருத்தி அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர் சங்கம் மாநில பொது செயலாளர் வெங்கடாசலபதி கூறியதாவது: மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கை விவரம் ஆக.,25ல் பட்டியலிடப்பட்டு அரசுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் பதிவாளரின் அறிவிப்பையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியை செப்.,16 வரை நீட்டித்தால், 2500 அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும். முதுநிலை கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி (பி.ஜி.டி.சி.எம்.,) பயின்ற மற்றும் பயிலும் மாணவரையும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.