தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகள் வரும் அக்டோபர் மாதம் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் ஆகியவை சார்பில் 47-ஆவது ஜவாஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல், கணித, சுற்றுப்புறக் கண்காட்சி, அறிவியல் பெருவிழா, கணித கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் நடத்தப்படவுள்ளன
"அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நீடித்த வளர்ச்சி' என்ற கருப்பொருளில் இந்த நிகழ்ச்சிகள் பள்ளி, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் அளவில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி தலைமை ஆசிரியரைப் பொறுப்பு அலுவலராகக் கொண்டு அக்டோபர் 5-ஆம் தேதி நடத்தப்பட வேண்டும்.
இதேபோன்று கல்வி மாவட்ட அளவிலான கண்காட்சிஅக்டோபர் 10-ஆம் தேதியும் வருவாய் மாவட்ட அளவிலான கண்காட்சி அக்.14, 15 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட வேண்டும்.அதேவேளையில் அக்டோபர் 15-ஆம் தேதி ஏபிஜெ அப்துல்கலாம் பிறந்த நாளை (இளைஞர் எழுச்சி நாள்) அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும். மேலும் அறிவியல் கண்காட்சி நடத்துவதற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தால் விடுவிக்கப்படும் நிதியை அந்த இயக்கத்தின் அறிவுறுத்தல்களுக்குட்பட்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோர்- பொதுமக்கள் பார்வையிட...
இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆசிரியர்கள், மாணவர்கள், அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலோடு சிறப்பாக நடத்த வேண்டும். இவற்றை பொதுமக்கள், பெற்றோர் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் மாற்றுத்திறனாளி மாணவர்களையும் பங்கேற்கச் செய்து அவர்களது சிறந்த படைப்புகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்க வழிவகை செய்திட வேண்டும். வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்படுவர் என அதில் கூறியுள்ளார்.