அக். 2ஆம் தேதி சுதந்திரப் போராட்ட தியாகி காந்தி பிறந்தநாள். காந்தியின் பிறந்தநாள் கட்டாய அரசு விடுமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், காந்தியின் பிறந்தநாளின்போது தமிழ்நாட்டில் ஆயிரத்து 596 நிறுவனங்கள் செயல்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
காந்தி ஜெயந்தியின்போது அரசு உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்ட நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:காந்தி பிறந்தநாளை, தமிழ்நாடு தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை சட்டத்தின்படி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக். 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியின்போது அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட நிறுவனங்களில் தொழிலாளர் நலத்துறை ஆய்வு நடத்தியது.
ஆய்வின்போது, சென்னை மண்டலத்துக்குட்பட்ட வட்டத்தில் 893 இடங்களில் நடத்தப்பட்டது. இதில் 566 நிறுவனங்களில் சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல் தமிழ்நாடு முழுவதும், நடத்தப்பட்ட ஆய்வுகளில், விதியை மீறி செயல்பட்டதாக, 813 கடைகள், 653 நிறுவனங்கள், 122 போக்குவரத்து நிறுவனங்கள், 8 தோட்ட நிறுவனங்கள் என மொத்தம் ஆயிரத்து 596 நிறுவனங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாம் பணிபுரியும் நிறுவனங்களில் தொழிலாளர் நலன் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் அதைத் தொழிலாளர் நலத்துறைக்குத் தெரியப்படுத்தவும் எனத் தொழிலாளர் அமைப்புகள் கூறுகின்றன. குறிப்பாக பல்வேறு ஐடி நிறுவனங்கள் இந்திய அரசு விடுமுறை தினத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு பல்வேறு நடைமுறை திருத்தங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றன. ஆனால், இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டுத்தான் நமது நாட்டில் நிறுவனங்களை நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
.
ஐடி ஊழியர் கலையரசன் இதுகுறித்து கூறுகையில், “நான் தனியார் வங்கியின் அலுவல் சார்ந்த பணிகளைச் செய்து வருகிறேன். அமெரிக்காவில் எப்போது விடுமுறை அளிக்கப்படுகிறதே அப்போது மட்டும்தான் எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை. சுதந்திர தினமென்றால்கூட அமெரிக்கச் சுதந்திர தினத்தில்தான் விடுமுறை கிடைக்கிறது” என்கிறார். பலர் இப்போதைய சூழல் தங்கள் வேலைக்குப் பிரச்சனை ஏற்பட்டுவிடும் என்ற பயத்திலே தங்கள் நிறுவனங்களில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்க முன்வருவதில்லை எனத் தெரிகிறது.