சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும் தேசிய உயர்கல்வி திட்டத்தின் (ரூசா) சார்பில் ஆராய்ச்சி படிப்புகளை சர்வதேச அளவில் மேம்படுத்துவது எப்படி? என்பது குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்துக்கு உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
கருத்தரங்கில் மங்கத்ராம் ஷர்மா பேசுகையில், ‘ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுகளை பல்வேறு துறைகளில் மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவுகள் சமூக சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமைய வேண்டும்.
ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ள 5 ஆண்டுகள் என்று எடுத்துக்கொள்கின்றனர். அதை 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் முடிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டும் பேராசிரியர்கள் மாணவர்களின் ஆய்வு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், ஆய்வின் தரம் மேம்படும் விதமாகவும் செயல்பட வேண்டும்’ என்றார்.
கருத்தரங்கில் கலந்து கொண்டு வெளியே வந்த மங்கத்ராம் ஷர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
‘ரூசா’ திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக பல்கலைக்கழகங்களின் மேம்பாட்டுக்காக ரூ.20 கோடி வழங்கப்பட்டு வந்தது. உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி படிப்புக்கு அவர்கள் அதை செலவு செய்து கொள்ளலாம். அதேபோல், தமிழகத்தில் சிறந்த பல்கலைக்கழகமாக இருக்கும் அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு ஆராய்ச்சி படிப்பை மேம்படுத்துவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று இருக்கும் தமிழகத்தில் உள்ள 6 பல்கலைக்கழகங்களுக்கு தலா ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் நிதியை கொண்டு மற்ற பல்கலைக்கழகங்களிலும் அதன் தரம் மற்றும் ஆராய்ச்சி படிப்பை மேம்படுத்துவதற்கு எவ்வாறு ஒதுக்குவது? என்பது குறித்தும் பேச இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் கீழ் மட்டும் ஆண்டிற்கு 6 ஆயிரம் பேர் முனைவர் பட்டம் (பிஎச்.டி.) பெறுகின்றனர். இதுதவிர அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளிலும் ஏராளமானோர் பட்டம் பெறுகின்றனர். முனைவர் பட்டம் என்பது அதீத தகுதி கிடையாது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவுறுத்தலின்படி, பேராசிரியர்கள் அனைவரும் முனைவர் பட்டம் பெற்று இருக்க வேண்டும். இதனால் வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது. உறுப்பு கல்லூரிகளில் கணக்கெடுத்து பார்த்தபோது, கல்வி தகுதி இல்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்கள். அவர்களை திடீரென்று எதுவும் சொல்ல முடியாது. அவர்கள் நெட், செட் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. எம்.பில் முடித்திருந்தால் பிஎச்.டி. முடிக்க தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைத்துள்ள புகழ்பெற்ற நிறுவனம் என்ற சிறப்பு அங்கீகாரம் குறித்து முதல்- அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அங்கீகாரம் வழங்குவதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த அங்கீகாரம் வழங்கப்படுவதால், தமிழக மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு குறையக்கூடாது. அதில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இந்த அங்கீகாரத்தினால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் சென்றுவிடுமோ? என்று சிலர் அச்சம் கொள்கிறார்கள்.
அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் அண்ணா பல்கலைக்கழகம் செயல்படும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதி இருக்கிறது. அதற்கு பதில் கிடைத்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.