கல்வித் துறையில் நீண்ட நாட்களாக பணிக்கு வராத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்து, பட்டியல் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில், ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலும், முறையான அனுமதி வாங்க வேண்டும். உயர் கல்வி படிக்க; பாஸ்போர்ட் பெற; வெளிநாடு செல்ல; சொத்துகள் வாங்க, உயர் அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து, முன் அனுமதி பெற வேண்டும்.
ஆனால், கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், பல விதமாக விடுப்பு எடுக்கின்றனர். கல்வி ஆண்டின் இறுதியில், தங்கள் பிள்ளைகள் பொதுத்தேர்வு அல்லது கல்லுாரி தேர்வு எழுத பயிற்சி தர வேண்டும்; குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்; வீடு கட்ட வேண்டும்; வெளியூரில் உள்ள சொத்து பிரச்னைகளை தீர்க்க வேண்டும் எனக்கூறி, மாதக் கணக்கில் விடுப்பு எடுக்கின்றனர்.