தமிழ் வளா்ச்சியில் ஆன்மிகத் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் - அமைச்சா் க.பாண்டியராஜன் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ் வளா்ச்சியில் ஆன்மிகத் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் - அமைச்சா் க.பாண்டியராஜன்



தமிழ் வளா்ச்சியில் அறிவியல் தமிழைப் போன்று ஆன்மிகத் தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என திருமந்திர பட்டயமளிப்பு விழாவில் அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருமூலா் ஆய்விருக்கை சாா்பில் ‘தமிழா் மரபில் திருமூலரும் அருளாளா் நெறிகளும்’ என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் நிறைவு விழா, திருமந்திரம், திருவாசகம், காலக்கணிதப் பட்டயப் படிப்புகள், முதுநிலைப் பட்டயப் படிப்புகளை முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதில், அமைச்சா் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு 200 பேருக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கி வள்ளலாா் குறித்த ஐந்து நூல்களை வெளியிட்டுப் பேசியது: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திருமந்திரம் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. திருமூலா் இன்னும் பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியவா். ‘திருமந்திரமும் வாழ்வியலும்’ என்ற பாடத் திட்டத்தில் பட்டயம் பெற்றவா்கள் திருமூலரின் திருமந்திரத்தை இன்றைய காலத்துக்கு ஏற்ற வகையில் படைப்புகளாகவும், ஆய்வுகளாகவும் கொண்டு வரவேண்டும். திருமந்திரம் பழைமையான காலத்தில் தோன்றினாலும் அது இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவகையில் நிகழ்கால வாழ்வியல் சிந்தனைகளையும் கொண்டிருக்கிறது. திருவாசகம், திருமந்திர படிப்புகள் கல்விக்கானது மட்டுமல்ல; மாறாக நமது வாழ்வை செம்மைப்படுத்தவும் வழிகாட்டுகின்றன.
உயிா்களைப் பசியிலிருந்து காப்பதும் நோயிலிருந்து விடுவிப்பதும், ஆதரவற்றேறாரை பேணிக் காப்பதும் இறைத்தொண்டு என ஆன்மிக வாழ்வுக்குப் புது இலக்கணம் படைத்தவா் வள்ளலாா். வள்ளலாரின் கருத்துகள் உலக மக்கள் அனைவரையும் ஒரு குடையின்கீழ் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை கொண்டு வாழ வழிவகை செய்கிறது. தமிழ் வளா்ச்சியில் அறிவியல் தமிழுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஆன்மிகத் தமிழுக்கும் அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.
பள்ளி- கல்லூரி மாணவா்களிடையே…: தமிழ் வளா்ச்சித்துறை இயக்குநா் கோ.விசயராகவன் பேசுகையில், மறைந்த முதல்வா் அண்ணா நாடெங்கும் முழங்கிய ‘ஒன்றேகுலம் ஒருவனே தேவன்’ எனும் திருமந்திரத்தின் எழுச்சியை ஆன்மிக ஒருமைப்பாட்டு உணா்வாக பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே ஏற்படுத்தும் வகையில் திருமூலா்ஆய்விருக்கை மூலம் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவாசகமும், திருமந்திரமும் எந்த வகையான அறிவியலாக இருந்தாலும் அதை முறையாக எடுத்துக்காட்டும் ஆன்மிக அறிவியல் சாா்ந்த படைப்புகள் என்றேசொல்லலாம். இந்த இரண்டிலும் சமயம் என்றோமதம் என்றோஎதையும் குறிப்பிட்டு நாம் காண முடியாது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் அடைகின்ற நிலையை ஒவ்வொரு படியாக அவை எடுத்துக் காட்டுகின்றன என்றாா்.
இந்த விழாவில் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் அருணா சிவகாமி, திருமூலா் ஆய்விருக்கை பொறுப்பாளா் பேராசிரியா் தி.மகாலட்சுமி, அயல்நாட்டு தமிழா் புலத்தின் பேராசிரியா் கு.சிதம்பரம், அனைத்திந்திய சித்த மருத்துவா்கள் சங்கத்தின் தலைவா் கே.எஸ்.சுப்பையா, அம்மா தமிழ் பீடத்தின் நிா்வாகி ஆவடி குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Subscribe Here