சென்னையை நோக்கி நகரும் புதிய காற்றழுத்த பகுதியால் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நாள் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடல், அரபிக்கடலில் மாறி மாறி காற்றழுத்த தாழ்வு உருவானதால் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்பட மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
இதனால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி உள்ளது. மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியதால் உபரிநீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது.
தற்போது அந்தமான் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி வருகிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி விடும். பின்னர் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களுக்கு அதிக மழை கிடைக்கும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் கூறியதாவது:-
தற்போது பருவ மழை காரணமாக அவ்வப்போது மேகங்கள் திரண்டு மழையை தந்து கொண்டிருக்கிறது. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு அனைத்தும் தமிழகத்தை விட்டு விலகி சென்றுவிட்டது.
தற்போது சென்னையில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு அந்தமான் அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது.
இந்த மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு எப்போது உருவானாலும் அது சென்னை, ஆந்திரா, ஒடிசா நோக்கிதான் நகர்ந்து வரும்.
இப்போது உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு ஆந்திரா, ஒடிசா நோக்கிதான் செல்லும் என தெரிகிறது. வடக்கு வடமேற்காக நகரும் போது சென்னை அருகே வந்து விடும். எனவே இன்னும் 4 நாட்களுக்கு பிறகு இதன் நகர்வை பொறுத்து மழையின் வேகம் தெரியவரும்.
தெற்கு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு உருவானால்தான் சென்னைக்கு அதிக மழை கிடைக்கும். ஆனால் இப்போது உருவாகி வரும் காற்றழுத்தம் வடக்கு அந்தமான் அருகே உருவாகி வருகிறது
. எனவே ஆந்திராவுக்கு அதிக மழை கிடைக்கும். சென்னையை பொறுத்தவரை அதைவிட குறைவாக மழை கிடைக்கும். ஆனாலும் 3 நாட்களுக்கு மழை இருக்கும்.
நகரின் வெப்பநிலை அதிக பட்சம் 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பல பகுதிகளில் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.