தமிழ்நாட்டில், 975 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேலும் 3 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
தமிழ்நாட்டில், புதிதாக 13 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் வழங்குமாறு, மத்திய அரசை, மாநில அரசு கேட்டுக்கொண்டிருந்தது. இதனை பரிசீலித்த மத்திய அரசு, கடந்த அக்டோபர் மாதம் 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மக்கள் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறைக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில், தலா 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தமுள்ள 975 கோடி ரூபாயில், மத்திய அரசின் பங்காக 585 கோடி ரூபாயும், மாநில அரசின் பங்காக 390 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்படும்.