தமிழக அரசு வழங்கிய பாட புத்தகங்களை பயன்படுத்தாத தனியார் பள்ளிகள் : மாணவர்களுக்கு சிக்கல் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழக அரசு வழங்கிய பாட புத்தகங்களை பயன்படுத்தாத தனியார் பள்ளிகள் : மாணவர்களுக்கு சிக்கல்


நாகர்கோவில்: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதுவரை தமிழக அரசு வழங்கிய பாட புத்தகங்களை திறந்து கூட பார்க்காத தனியார் பள்ளி மாணவர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்வு நடைபெறும், நடைபெறாது என்று இருவேறு கருத்துகள் எழுந்து வந்தநிலையில் தற்போது பொதுதேர்வுக்கு கால அட்டவணை கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்வு நடைபெறுவது உறுதியாகியுள்ளது. குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகள் அருகே உள்ள பிற பள்ளிகளில் தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது. 8ம் வகுப்புக்கு மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17 வரை தேர்வு நடைபெறும். 5ம் வகுப்புக்கு ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.15 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரையாண்டு தேர்வும் பொதுத்தேர்வுக்கு முன்னதாக உள்ள மாதிரி தேர்வு போன்று நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.
தமிழகத்தில் முப்பருவ கல்வி முறையில் 9ம் வகுப்பு வரை மூன்று பருவங்களாக மாணவ மாணவியருக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. இதற்கு ஒவ்வொரு பருவத்திற்கும் முன்னதாக பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மூன்று பருவங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பருவத்துடன் அந்த பருவ பாட பகுதிகளை பின்னர் மீண்டும் படிக்காத மாணவ மாணவியர் இந்த முறை 5, 8ம் வகுப்புகளுக்கு முழு பாட புத்தகத்தையும் படித்து மீண்டும் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலை உள்ளது.
இவை ஒருபுறம் இருக்க தனியார் மெட்ரிக் பள்ளிகள் பல 5 மற்றும் 8ம் வகுப்புக்கு தமிழக அரசின் பாட புத்தகங்களின்படி பாடம் போதிப்பது இல்லை. தமிழக அரசின் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டாலும் அதில் உள்ள மொழிப்பாடமான தமிழ் பாடத்திற்கு மட்டும் அரசு புத்தகம் பயன்படுத்தப்படுகிறது. இதர ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கு பிற பதிப்பகங்கள், சிபிஎஸ்இ பாட திட்டத்தில் உள்ள ஆங்கிலம், கணிதம் பாட புத்தகங்கள் போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அரசு வழங்கிய பாட புத்தகங்கள் பல்வேறு தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வீடுகளில் முடங்கியுள்ளது.
வேறு புத்தகங்களை மையமாக வைத்து பாடம் போதிப்பதாலும், அதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தி கேள்விகள் கேட்பதாலும் மாணவர்கள் அரசு வழங்கியுள்ள பாட புத்தகங்களை திறந்துகூட பார்ப்பது இல்லை என்ற சூழல் பள்ளிகளிலும், வீடுகளிலும் உள்ளது. மாணவர்கள் போட்டித்தேர்வை எதிர்கொள்ளத்தக்க வகையில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த தனியார் பள்ளி நிர்வாகங்கள் வேறு பதிப்பக பாடபுத்தகங்களை நாடி அதன் அடிப்படையில் பாடங்களை போதிப்பதுடன் அதற்கேற்ப வினாக்களையும் தயார் செய்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இது ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் வேறுபடுகிறது.
தற்போது இந்த மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதும்போது தமிழக அரசின் பாட புத்தகத்தை பின்பற்றி கேள்விகள் கேட்கப்படும்போது அதனை மாணவர்கள் எவ்வாறு எழுதுவது? என்பது பெரும் குழப்பத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு சில கேள்விகள் நடத்தாத பாடத்தில் இருந்து வந்தாலும் கவலை கொள்கின்ற மாணவர்கள் ஒட்டுமொத்த கேள்விகளும் புதியதாக இருக்கும் நிலையில் சிறப்பாக படித்திருந்தாலும் அரசின் பாட திட்ட கேள்விகளை எதிர்கொள்வது சிக்கலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக தனியார் மெட்ரிக் பள்ளிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘தமிழக அரசு வழங்கியுள்ள பாட புத்தகங்களை அனைத்து பள்ளிகளும்  மாணவர்களுக்கும் வழங்கியுள்ளன.
அந்த புத்தகங்களை கொண்டு ஆசிரியர்கள் பாடம் போதிக்க செய்ய வேண்டியது அந்தந்த பள்ளி நிர்வாகங்களின் கடமை. அவ்வாறு செய்யாமல் வேறு பாட திட்ட புத்தகங்களை பயன்படுத்தி பாடங்களை போதித்தால் அவர்கள்தான் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும். பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகள் அரசு வழங்கியுள்ள பாட புத்தகங்களைத்தான் பயன்படுத்துகின்றன. 10 சதவீத பள்ளிகள் தமிழக அரசு வழங்கிய பாட புத்தகங்களை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
அவர்கள் வேறு பாட புத்தகங்களை பயன்படுத்தலாம். சில பள்ளிகள் இப்போதே அரையாண்டு தேர்வுக்கு தயாராகிவிட்டன. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும்போது கம்ப்யூட்டர், இந்தி, பொது அறிவு உள்ளிட்ட கூடுதல் பாடங்களை தவிர்த்து 5, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பாடங்களை கொண்டு தயாராகின்ற சூழல் பள்ளிகளில் இப்போது ஏற்பட்டுள்ளது. அரசு பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு மட்டுமின்றி இந்த முறை தனியார் பள்ளிகளுக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ளது. எனவே பொதுத்தேர்வை எதிர்கொள்ள தனியார் பள்ளிகள் அரசு வழங்கியுள்ள பாட புத்தகங்களை பின்பற்றியாக வேண்டிய கட்டாயம் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

Subscribe Here