*மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற கோரிக்கை
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அரசு பள்ளியில் காவு வாங்க காத்திருக்கும் கிணறு உள்ளது. அதை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வத்தலக்குண்டு கல்விமாவட்ட அலுவலகம் பின்புறம் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தையொட்டி 50 அடி அழமுள்ள ஒரு பாழடைந்த கிணறு உள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள மக்கள் தண்ணீர் எடுக்க பயன்படுத்தி வந்தனர். தற்போது தண்ணீர் வற்றியதால் குப்பைதொட்டியாக காட்சியளிக்கிறது.
வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 300 மாணவா்கள் படிக்கின்றனர். பல மாணவர்கள் கிணறு உள்ள பகுதிக்கு சென்று விளையாடுகின்றனர். கிணற்றில் கைபிடிச்சுவர் இருந்த போதிலும், அது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாணவர்கள் விளையாடும் போது வேகத்தில் கைப்பிடிச்சுவர் நொறுங்கி கிணற்றில் மாணவர்கள் விழும் அபாயமுள்ளது. எனவே பயனின்றி உள்ள கிணற்றை மூடவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை ஏற்று இரும்பு கம்பிகளால் மேல் பகுதி மூடப்பட்டது. நாளடைவில் இரும்பு கம்பி மூடியும் சேதமடைந்துவிட்டது. எனவே கிணற்றில் நிரந்தரமாக கல் மண் போன்றவற்றை கொட்டி மூட வேண்டும் என்றும், இல்லையென்றால் அதை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.