ஃபிட் இந்தியா’ இயக்கத்தின் மூலம் மாணவ-மாணவியரின் உடல்தகுதி அடிப்படையில் பள்ளிகளை தரவரிசைப்படுத்தும் நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:
இளம்பருவத்தில் இருந்தே மாணவ-மாணவியரின் உடல்தகுதியை திடப்படுத்திக் கொள்ளும் வகையில் பள்ளிசார்ந்த உடல்கல்வி வகுப்புகள் நாடு தழுவிய அளவில் அதிகமாக நடைபெறும் வகையில்
‘ஃபிட் இந்தியா’ (Fit India) எனப்படும் புதிய இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி 29-8-2019 அன்று தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பான அறிவிப்பை தனது ‘மன் கி பாத்’ வானொலி உரையின்போது இன்று மீண்டும் தெரிவித்த பிரதமர் மோடி, ’இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘ஃபிட் இந்தியா’ இணையப்பக்கத்தில் பள்ளிகள் தங்களை பதிவு செய்துக் கொள்ளலாம். அதன் பின்னர் அவர்கள் ‘ஃபிட் இந்தியா’ கொடி மற்றும் இலச்சினையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தில் அனைத்து பள்ளிகளும் இணைந்து உடல்தகுதி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த மாபெரும் இயக்கத்துக்கு துணையாக இருக்க வேண்டும் என நான் வேண்டிக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
‘ஃபிட் இந்தியா’ எனப்படும் இதுபோன்ற உடல்கல்வி வகுப்புகளுக்கு மத்திய அரசின் சி.பி.எஸ்.சி. பள்ளிகள் ஒதுக்கிவரும் நேரத்தையும் ‘ஃபிட் இந்தியா’ வாரம் கொண்டாடும் வகையில் அவை அளித்துவரும் முக்கியத்துவத்தையும் நினைவுகூர்ந்த மோடி, மாநில அரசு பள்ளிகளும் இதை இனி கடைப்பிடித்து டிசம்பர் மாதத்தில் ‘ஃபிட் இந்தியா’ வாரத்தை கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.