சென்னை,
சென்னையில் உள்ள அமெரிக்க சர்வதேச பள்ளி மிகவும் புகழ் பெற்ற பள்ளியாகும். மாணவர்கள் சேர்க்கை மற்றும் சில விதிகளை மீறியதாக இந்த பள்ளி நிர்வாகம் மீது புகார்கள் வந்தன. இதுகுறித்து சென்னை முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார்.
பின்னர் பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசை ரத்துசெய்யக்கோரி
சென்னை ஐகோர்ட்டில், பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அதில், ‘இந்தியா-அமெரிக்காவுக்கு இடையே 1995-ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்கா நாட்டை சேர்ந்த குழந்தைகளுக்காக, இந்த பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. எனவே, கட்டாய கல்வி உரிமைச்சட்டம் இந்த பள்ளிக்கு பொருந்தாது’ என்று கூறப்பட்டது.
இந்த வழக்கை கடந்த ஆகஸ்டு மாதம் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, முதன்மை கல்வி அதிகாரி அனுப்பிய நோட்டீசுக்கு, 15 நாட்களுடன் உரிய ஆவணங்களுடன் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் தரும் விளக்கத்தை பெற்று, ஒரு மாதத்துக்குள் தகுந்த உத்தரவை முதன்மை கல்வி அதிகாரி பிறப்பிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டது.
இந்தநிலையில், அமெரிக்க சர்வதேச பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்றும் அங்கு படிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் சேருவதற்கு வசதியாக அவர்களது மாற்றுச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அதிகாரி கடந்த நவம்பர் 18-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பள்ளி நிர்வாகம் மீண்டும் வழக்கு தொடர்ந்தது.
அதில், ‘ஐகோர்ட்டு உத்தரவின்படி தகுந்த ஆவணங்களுடன் விளக்கத்தை வழங்கி விட்டோம். ஆனால், நாங்கள் எந்த ஒரு விளக்கமும், ஆவணங்களும் வழங்கவில்லை என்று கூறி, பள்ளியை இழுத்து மூட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்ததா? அதை முதன்மை கல்வி அதிகாரி பெற்றுள்ளாரா? என்பதை உறுதி செய்ய அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து கல்வித்துறை சார்பில் ஐகோர்ட்டுக்கு அளித்த விளக்கத்தில், ‘பள்ளி நிர்வாகம் அனுப்பிய ஆவணங்களுடன் கூடிய விளக்கம் கடந்த நவம்பர் 17-ந்தேதி முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் உள்ள தபால் பிரிவுக்கு வந்துள்ளது. இந்த விவரத்தை தபால் பிரிவு ஊழியர்கள் முதன்மை கல்வி அதிகாரிக்கு தெரிவிக்கவில்லை. இதனால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்கவில்லை என்று நினைத்து, பள்ளியை இழுத்து மூட முதன்மை கல்வி அதிகாரி நவம்பர் 18-ந்தேதி உத்தரவிட்டுள்ளார்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்ற முதன்மை கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், ‘ஏதாவது விளக்கம் தேவை என்றால், மீண்டும் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து விளக்கத்தை பெற்று, அதன் மீது தகுந்த உத்தரவை 4 வாரத்துக்குள் பிறப்பிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.