5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற முடிவை எடுத்த பள்ளி கல்வி துறை செயலாளர் திடீர் மாற்றம் : தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற முடிவை எடுத்த பள்ளி கல்வி துறை செயலாளர் திடீர் மாற்றம் : தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு

தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட காரணமாக இருந்த பள்ளி கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவை அதிரடியாக மாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் நேற்று உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை மேற்கோள்காட்டி, தமிழக அரசு புதிய கல்வி கொள்கையை கொண்டுவர அதிகம் ஆர்வம் காட்டியது . அதன்படி, தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதலே 5ம் மற்றும் 8ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு கடந்த 13.9.2019 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்களும், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும், தமிழக அரசு 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதில் உறுதியாக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளி கல்வி துறையின் செயலாளர் பிரதீப் யாதவ் ஆலோசனையின்படியே அமைச்சர் செங்கோட்டையன் செயல்படுகிறார் என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தொடர்ந்து குழப்பமாக அறிவிப்புகளை வெளியிட்டபடி இருந்தார். அதாவது, 5ம் வகுப்பு மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரமும், 8ம் வகுப்பு மாணவர்கள் 3 கிலோ மீட்டர் தூரமும் உள்ள பள்ளிகளுக்கு சென்று பொதுத்தேர்வு எழுதுவார்கள் என்று அறிவித்தார். பின்னர், மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வெழுதலாம், வேறு பள்ளி ஆசிரியர்கள் தேர்வு மையத்தில் பணியாற்றுவார்கள் என்ற புதிய அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். இப்படி மாறி மாறி அமைச்சர் அறிவித்து வந்ததால் மாணவர்களும் , பெற்றோர்களும் குழப்பம் அடைந்தனர். தமிழக அரசின் இதுபோன்ற குழப்பமான அறிவிப்புகளால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பம் அடைந்தனர். மாணவர்களின் கல்வி திட்டத்தில் ஒரு புதிய மாற்றம் கொண்டு வரும்போது அதுகுறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிய வேண்டாமாஎன்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

தமிழகத்தில் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள், சமூக சிந்தனையாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த திட்டத்தையே கைவிடும் முடிவுக்கு தமிழக அரசு வந்தது. இதுபற்றி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், 5 மற்றும் 8வது வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. அவற்றை தமிழக அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்' என்று கூறினார். 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என அறிவித்து தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த, பள்ளி கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவின் தவறான முடிவுகள் காரணம் என்று கூறப்பட்டது. இதனால், அவரை அதிரடியாக மாற்றம் செய்ய முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அவர் மாற்றப்பட்டு, கைத்தறி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வித்துறை குழப்பங்கள்

* நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், சிஏ தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்துவதில் குளறுபடி.
* பி1க்கு என்று பொதுத்தேர்வை அறிமுகப்படுத்தியது. அதற்கு முன்திட்டமிடல் இல்லாதது.
* ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அரசு பள்ளிகளில் புது பாடத்திட்டங்களை துவக்கியது.
* துவக்க, நடுநிலைப் பள்ளிகளின் கண்காணிப்பை வேறு ஒரு தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து, அவர்களுக்குள் முரண்பாடுகளை உருவாக்கியது.
* பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு பொருட்களை வாங்கும் முறையை மாற்றியது.
* புதிதாக தொடங்கப்பட்ட எல்கேஜி வகுப்புகளுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாமை.
* தமிழ் மொழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை வைத்து கணக்கு பதிவியல், பொருளாதாரம் போன்ற பாடங்களை ஆங்கிலத்தில் நடத்த வைத்து, ஆசிரியர்களை குழப்பியது என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பாஜ உத்தரவுகளை அமல்படுத்த அக்கறை காட்டியதே இதற்கு முக்கிய காரணம்.

ஐஏஎஸ் பணியிட மாற்றம்

தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: போக்குவரத்துறை செயலாளராக இருந்த பி.சந்திரமோகன் மாற்றப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ் மாற்றப்பட்டு, போக்குவரத்து துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை மற்றும் எரிசக்தித்துறை செயலாளராக இருந்த தீரஜ்குமார் பள்ளி கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் வகித்து வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையும் தீரஜ்குமார் தொடர்ந்து கவனிப்பார். கைத்தறி, கைவினை பொருட்கள் துறை செயலாளராக இருந்த குமார் ஜெயந்த், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை துறை செயலாளராக உள்ள ஏ.கார்த்திக், எரிச்சக்தி துறை செயலாளராகவும் கூடுதலாக (முழு பொறுப்பு) கவனிப்பார் .

Subscribe Here