அரசுப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தில் பச்சைபயிறு, கேழ்வரகு அடை, குதிரைவாலி, சாமை கஞ்சி, கொண்டைகடலை வழங்க முடிவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசுப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தில் பச்சைபயிறு, கேழ்வரகு அடை, குதிரைவாலி, சாமை கஞ்சி, கொண்டைகடலை வழங்க முடிவு

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
காமராஜர் கொண்டு வந்த இந்த திட்டம் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. கருணாநிதி முதல்வராக இருந்த போது சத்துணவுடன் முட்டையும் வழங்கினார்.
43 ஆயிரம் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவால் சுமார் 50 லட்சம் மாணவ- மாணவிகள் பயன் பெறுகின்றனர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது
. இதனை கருத்தில் கொண்டு மாணவ- மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 320 பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் 85 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுகிறார்கள்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற உணவுகள் தினமும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த காலை உணவு திட்டத்துக்கு சென்னை மாணவ-மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.
இந்த நிலையில் காலை உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும்
உள்ள அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ரூ.8 ஆயிரம் கோடி செலவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பள்ளி-கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை ஆகிய 2 துறைகளும் இணைந்து இதற்கான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்பித்துள்ளதாகவும் தெரிகிறது.
தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் காலை உணவு திட்டத்தில் பாரம்பரிய உணவுகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பச்சைபயிறு, கேழ்வரகு அடை, குதிரைவாலி,
சாமை கஞ்சி, கொண்டைகடலை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கான அறிவிப்பு தமிழக சட்டசபையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தான் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதனை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் வழங்கப்பட உள்ள காலை உணவு திட்டம் வரும் கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் 65 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர்.

Subscribe Here