தங்கள் விருப்பப்படி ஆசிரியர்களை நியமனம் செய்வதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அரசுக்கும் தனியார் பள்ளி நிர்வாகக் கூட்டமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
கேரளாவில் அரசின் நிதி உதவியுடன் செயல்படும் பள்ளி நிர்வாகங்களுக்கும் அரசுக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது. கடந்த 7-ம் தேதி கேரள சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ஆசிரியர் நியமனம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பட்ஜெட் உரையில், ``கேரளக் கல்வித்துறையின் விதிகளுக்கு மாறாகப் பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்படுகின்றன
. அரசு, ஆசிரியர்களை நியமிக்கும் முன்பாக பள்ளி நிர்வாகங்களே அதை தங்கள் கையில் எடுக்கின்றன. இனிவரும் காலங்களில், ஆசிரியர் நியமனங்களை அரசே மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.
அரசின் இந்த முடிவுக்குக் கேரள தனியார் பள்ளி நிர்வாகங்களின் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். `அரசு தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதுடன் அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபடுவோம்'
எனத் தெரிவித்தனர்.
தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் இந்த அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ``அரசின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு ஆசிரியர் நியமனங்களை தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும். அதைச் செய்யத் தவறினால் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தத் தயங்காது’’ என எச்சரித்தார்.
இதுதொடர்பாக கேரள தனியார்
பள்ளி நிர்வாகங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான மானி கொல்லம் கூறுகையில், ``தனியார் பள்ளி நிர்வாகங்களின் பிரச்னை தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தவறாகப் புரிந்துகொண்டதாலேயே கடுமையாகப் பேசியிருக்கிறார். ஆசிரியர் நியமனங்கள் எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் நடப்பதுபோல நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் ஊதிப்பெரிதாக்கி விட்டார். அதில் உண்மை கிடையாது.
அரசின் சட்டத்துக்கு
உட்பட்டே ஆசிரியர் நியமனங்கள் நடக்கின்றன. இதுதொடர்பாக அனைத்துத் தனியார் பள்ளி நிர்வாகங்களையும் அரசு அழைத்துப் பேச வேண்டும். யாராவது தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். அதைவிடுத்து, பள்ளிகளை எடுத்துக்கொள்வோம் என்று பேசுவது சரியல்ல. அப்படி எடுக்க நினைத்தால் பொதுப்பணித்துறை நிர்ணயிக்கும் வாடகையைக் கொடுத்துவிட்டு 3,000 தனியார் பள்ளிகளையும் அரசே எடுத்துக் கொள்ளட்டும்’’ என்றார் காட்டமாக!