அம்மாப்பேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம் பாளையத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 195 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியின் மெயின் கதவை ஆசிரியர்கள் திறக்க முயன்ற போது உட்புறம் கம்பி செருகப்பட்டு இருந்தது. இதனால் கம்பியை வளைத்து கதவை திறந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைத்திருந்த மாணவ- மாணவிகளின் வினாத்தாள்கள், ரேங்க் கார்டுகள் கிழித்து எறியப்பட்டு ஆங்காங்கே சிதறி கிடந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் பள்ளியை சோதனை செய்தனர். அப்போது பள்ளி கழிவறை கதவுகள் ஆடைக்கப்பட்டு கழிவறை உள்ளே பீங்கான் பாட்டில்களை போட்டு பள்ளியின் மேல் தள அறையை சூறையாடியது தெரிய வந்தது.
மேலும் பள்ளி வளாகத்தில் டம்ளரில் மண் எண்ணை இருந்தது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை பத்மா, பவானி மாவட்ட கல்வி அலுவலர் பழனி மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்த உள்ளனர். இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:-
ஏராளமான பொருட் செலவில் இந்த உயர் நிலைப் பள்ளி கட்டப்பட்டு உள்ளது. ஆனால் பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்படாததால் மர்ம நபர்கள் புகுந்து விடுகிறார்கள். இதனால் பள்ளி மற்றும் மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது.
எனவே பள்ளிக்கு உடனடியாக சுற்று சுவர் கட்டி தர வேண்டும். பள்ளியில் அத்து மீறி நுழையும் கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.