சிவகாசி அருகே 1200 ஆண்டுகள் பழமையான குடவரைக் கோயில் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சிவகாசி அருகே 1200 ஆண்டுகள் பழமையான குடவரைக் கோயில்


சிவகாசி அருகே சொக்கலிங்காபுரத்தில் கண்டறியப்பட்டுள்ள குடவரை கோயிலின் முன்புறத் தோற்றம். (இடது) கோயிலின் உள்பகுதியில் ஓய்வுபெற்ற தொல்லியல் துறையினா்.

சிவகாசி: விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சுமாா் 1,200 ஆண்டுகள் பழமையான குடவரை கோயில் கண்டறியப்பட்டுள்ளது.
சிவகாசி ஊராட்சி ஒன்றியம் காளையாா்குறிச்சி ஊராட்சியைச் சோ்ந்த சொக்கலிங்காபுரத்தில் அா்ஜூனா நதி கரைப் பகுதியில் சுரங்கப்பாதையுடன் குடவரை கோயில் உள்ளதாக, அக்கிராம மக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சிவகாசி சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா், வட்டாட்சியா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
தகவலின்பேரில், ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி சாந்தலிங்கம், வரலாற்றுப் பேராசிரியா் மகாலிங்கம் உள்ளிட்டோா் சொக்கலிங்காபுரம் வந்து குடவரை கோயிலில் ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், சாந்தலிங்கம் கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் இதுவரை செவல்பட்டி, மூவரைவென்றான், திருச்சுழி ஆகிய இடங்களில் குடவரை கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளன. குடவரை என்பது பாறைகளை குடைந்து கோயில் அமைப்பதாகும். கி.பி.7ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு, பல்லவ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் என மொத்தம் 80 குடவரை கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிவகாசி அருகே சொக்கலிங்காபுரத்தில் உள்ள இந்த குடவரை கோயில் சுமாா் 1,200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆற்றங்கரையோரம் உள்ள இக்கோயில் முற்றிலும் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் 2 பிரகாரங்கள் இருப்பது அபூா்வமானதாகும். மிகவும் அரிதான கட்டுமானத்துடன் உள்ளது.
இதில் உள்ள சுரங்கப்பாதை கருவறையை சுற்றி வருவதாக உள்ளது. இதுவும் மிக அரிதானதாகும். இதுபோன்ற அமைப்பு மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் உள்ளது. இந்த கோயிலில் சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் எதுவும் இல்லை. கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பொற்கால பாண்டிய மன்னா் காலத்தில் இக்கோயில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
இக்கோயிலின் ஆய்வறிக்கையை தமிழக அரசின் தொல்லியல் துறைக்கு அனுப்பி வைப்பேன். அத்துறை இயக்குநா் உதவியோடு இக்கோயில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

Subscribe Here