மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி., தெரிவித்தார்.
ஊட்டியில்,அவர் கூறியதாவது:பள்ளிகள், கல்லுாரிகள் திறப்பு குறித்து, வரும், 9ம் தேதி பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்து கேட்ட பின், முடிவு செய்யப்படும்.மருத்துவ படிப்பில்,அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும்.அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றாலும், அவை தனியார் பள்ளிகளே. அவற்றில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாது.இவ்வாறு முதல்வர் பழனிசாமி ., கூறினார்.
இதற்கிடையில், ஈரோடு மாவட்டம், பவானியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை, ஆசிரியர் தகுதி தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற அனைவரும், வாழ்நாள் முழுதும் ஆசிரியர் பணி பெற தகுதி உடையவர்களாக, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கும்பகோணம் பள்ளி தீ விபத்து பிரச்னைக்கு பின், கட்டட உறுதி சான்றிதழ் பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே, அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
முன்னர், பள்ளிக்கான அங்கீகார சான்று ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டது. தற்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கட்டட உறுதிசான்று பெற்ற பள்ளிகளுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு பள்ளிக்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இதன்படி தமிழகத்தில், 2,690 பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வாயிலாக நடத்த படும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப் பட்டு உள்ளன. ஏதாவது பள்ளியில், அப்பொருட்கள் வழங்காமல் விடுபட்டிருந்தால், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வரும், 9ல் பெற்றோர்களுடன் அந்தந்த பள்ளிகளில் கலந்தாய்வு நடத்தப்படும்.
11ல் அறிவிப்பு
அதன்பின், முதல்வரிடம் வழங்கப்படும் கருத்துகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் வரும், 11ல், பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் உரிய முடிவை அறிவிப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.
அரசியல் கட்சியினருக்கு தடை
பள்ளிகளை திறந்தால், கொரோனா தொற்று அதிகமாகும் என, எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, வரும், 9ம் தேதி, அனைத்து பள்ளிகளிலும், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதன் விபரம்:பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பில், பெற்றோர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பெற்றோர் இல்லாத நிலையில், காப்பாளர் அல்லது உறவினர்கள் பங்கேற்கலாம்.
பெற்றோர் - ஆசிரியர் கழக முன்னாள் நிர்வாகிகள்பங்கேற்கக் கூடாது. பெற்றோர் என்ற பெயரில்,அரசியல் கட்சியினர், கருத்து கேட்பு கூட்டத்தில்பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது. எவ்விதமான சமூக அமைப்புகள், அரசியல் ஆதரவு அமைப்புகளை சேர்ந்தவர்களையும் அனுமதிக்க கூடாது.இவ்வாறு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக