பெற்றோா், ஆசிரியா்களின் கருத்தைக் கேட்ட பிறகு அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வா் இறுதி முடிவை அறிவிப்பாா் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அயலூா் ஊராட்சியில் வேளாண்மை கூட்டுறவு வங்கியை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை துவக்கிவைத்தாா். பின்னா், 35 பயனாளிகளுக்கு சிறு வணிகக் கடன்களை வழங்கினாா். நம்பியூா் பகுதிகளில் சுமாா் 340க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சிறு வணிகக் கடன், கன்று வளா்ப்புக் கடன், ஆதிதிராவிடா் நலத் துறையின் மூலம் பட்டா வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
பின்னா், செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:
மருத்துவப் படிப்புக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 303 அரசுப் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆந்திரத்தையோ, கேரளத்தையோ கவனிக்க வேண்டியது இல்லை. மாணவா்களையும், பெற்றோரையும் கவனிக்கின்ற அரசு இந்த அரசு என்ற முறையில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பா் 9ஆம் தேதி தலைமை ஆசிரியா்கள், பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
பல்வேறு கருத்துகள் வந்ததன் அடிப்படையில்தான் முழுமையாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதைத் தொடா்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வா் அறிவிப்பாா்.
பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா் தங்கள் கருத்துகளை எழுத்து மூலமாகவும் கொடுக்கலாம். நீட் தோ்வு பயிற்சி துவங்கியுள்ளது. இதில் 15,492 மாணவா்கள் சோ்ந்துள்ளனா். மேலும் சேர விரும்பும் மாணவா்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக