சேலம்: சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், மாநிலம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். சேலம் மோகன்குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு இன்று காலை, சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் வந்தார். அங்கு, மூத்த மருத்துவர்களுடன், கொரோனா சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.தினமும் 75 ஆயிரம் பேருக்கு நடத்தப்படும் பரிசோதனையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1,100 ஆக தான் இருக்கிறது. மாநிலம் முழுவதும் கொரோனா இறப்பு விகிதம் 1 சதவீதமாக உள்ளது. பாதிப்பு விகிதம் 2 சதவீதமாக இருக்கிறது. இதனை ஜீரோ ஆக மாற்ற வேண்டும். அதற்காக தற்போது, அரசு மற்றும் தனியார் விடுதிகள், கேண்டீன்கள், மேன்சன்கள், மெஸ்களில் கூட்டம் கூடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் வரை களப்பணியாளர்கள் போன்று அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, அங்குள்ள 2 பிளாக்கில் அனைவருக்கும் பரிசோதிக்கப்பட்டது. அண்ணா பல்கலையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு இறுதியாண்டு மாணவர்களும், முதுநிலை படிப்பு மாணவர்களும் வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும். 15 நாட்களுக்கு ஒருமுறை தொற்று உள்ளதா என்பதை அறிவோம். அதனால், மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், மனநல பாதிப்பிற்கு வந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து அரசு மருத்துவமனையிலும், மனநல நிபுணர்களை கொண்டு கவுன்சலிங் வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக