கரோனாவால் முடங்கிய கல்வி - தினமணி கட்டுரை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கரோனாவால் முடங்கிய கல்வி - தினமணி கட்டுரை

 


கோப்புப் படம்

உலகையே புரட்டிப்போட்டுள்ள கரோனா வைரஸ் பெருந்தொற்றின் பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. சாமானியர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை இந்த காலகட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக சிறிதேனும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, இடம்பெயர்வு என பல பிரச்னைகளை சுமார் ஓராண்டாக மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். பொதுமுடக்கத்தினால் பெரும்பாலான துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் கல்வித்துறையில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. 

கரோனா தொற்றுநோய் காரணமாக 2020 ஜனவரி இறுதியில் முதன்முதலில் சீனாவில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து கரோனா தொற்று தீவிரமாகப் பரவும் நாடுகள் தொடர்ந்து கல்வி நிறுவனங்களை மூடுவதாக அறிவித்தன. 

கரோனாவால் கல்வி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தரவுகளை வெளியிட்டு வரும் யுனெஸ்கோ, சீனாவில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி நிலவரப்படி, 10 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட, அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி 172 நாடுகளில் உள்ள 148 கோடி(1,484,712,787) மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது உலக அளவில் பாதிக்கப்பட்ட மாணவர்களில் 84.8% என்றும் தெரிவித்துள்ளது. பின்னர் கரோனா பாதிப்பு குறைய குறைய பல்வேறு நாடுகள், வழிகாட்டுதல்களுடன் பள்ளி, கல்லூரிகளைத் திறந்த நிலையில் டிசம்பர் 27 ஆம் தேதி நிலவரப்படி 12 நாடுகளில்  15 கோடி (158,486,270) மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவைப் பொருத்தவரை கடந்த மார்ச் மாத இறுதியில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பள்ளிகளைத் திறக்கலாம் என்று வழிகாட்டு நெறிமுறைகளுடன்  கூடிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டாலும் பெரும்பாலான மாநிலங்களில் டிசம்பர் இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. 

ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பள்ளிகளுக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததால், பள்ளிகளைத் திறக்கலாம் என்று முடிவு செய்திருந்த மற்ற மாநிலங்களும் அந்த முடிவைக் கைவிட்டன. வருகிற ஜனவரி 4 ஆம் தேதியிலிருந்து பள்ளிகளைத் திறக்க சில மாநிலங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. 

இந்தியாவில் கல்வி குறித்த ஆண்டறிக்கை, இந்தியாவில் தற்போது மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் தான் டிஜிட்டல் கல்வியை பெறுகின்றனர். 11% குழந்தைகள் ஆன்லைன் கல்வியை பெறுவதாகவும்  24.3% குழந்தைகள் பள்ளிகளிலிருந்து கற்றலுக்கான எந்த ஆதரவையும் பெறவில்லை என்று ஊரகப்  பகுதிகளில் உள்ள 3% குழந்தைகள் கடந்த ஆண்டு பள்ளியில் சேரவில்லை என்றும் தெரிவிக்கிறது. 

ஆசிரியர்களிடமிருந்து கல்வி பெற முடியாத குழந்தைகள் தங்கள் வீட்டில் உள்ளவர்களின் உதவியுடன் கல்வி பயில முற்படுகின்றனர் என்றும் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கல்வி பாதிப்பு குறித்து ஐ.நா.அவை வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் 1 பில்லியனுக்கும்(100 கோடி) அதிகமான குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 4 கோடி குழந்தைகள் வீட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தைப்பருவ கல்வியை இழந்துள்ளனர் என்றும் 25 கோடி மாணவர்கள் பாதியிலே பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளதாகவும் கூறுகிறது. இது அடுத்த தலைமுறைக் கல்வியின் பேரழிவு என்றே கருத முடிகிறது. 

இந்த சூழ்நிலையில் தான் பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பிரிட்டனில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸின் பெரும் தாக்கத்தை உணர்ந்த நாடுகள் உருமாறிய கரோனா வைரஸ் பரவாமல் இருக்க போதிய நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. இதனால் இந்தியாவிலும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எட்டப்படா நிலையில் உள்ளது.

பள்ளிகள் திறக்கப்படாததால் குறிப்பாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள், கல்லூரி முதலாமாண்டு, இறுதியாண்டு மாணவர்களின் நிலைமை மோசமாகியுள்ளது. உதாரணமாக நடப்பு ஆண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இதுவரை பள்ளிக்குச் செல்லவில்லை. அட்மிஷன் முதல் தேர்வு வரை அனைத்துமே ஆன்லைன்தான். தனியார் பள்ளிகள் இந்த வேலைகளை சிறப்பாகச் செய்தாலும் அரசுப்பள்ளி மாணவர்களின் நிலை கேள்விக்குறிதான். 

அவ்வாறு தொழில்நுட்ப வசதி பெற்றிருந்தாலும், அனைத்து பாடங்களையும் இணைய வழியில் பயிற்றுவிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். சிபிஎஸ்இ பாடங்கள் குறைப்பு குறித்து கடந்த மே மாதத்திலே அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் மாநில பாடத்திட்டங்கள் இன்னும் குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று. 

கடந்த முறை பல்வேறு மாநிலங்களில் பொதுத் தேர்வுகள், கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கே பல எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் நடப்பு ஆண்டில் பள்ளி வாசனை அறியாத மாணவர்களுக்கு தேர்வு எப்படி நடைபெறும்? அவ்வாறு 12 ஆம் வகுப்பு, கல்லூரி இறுதியாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டால் அவர்கள் எந்த மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்த நிலைக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்? இந்த ஆண்டில் ஆன்லைன் வாயிலாக அவர்கள் கற்றது என்ன? ஆன்லைன் கல்வி பெறமுடியாத மாணவர்களின் நிலை என்ன? அரசுப்பள்ளிகள் அனைத்திலும் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுகிறதா? இவ்வாறு பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன. இவற்றுக்கெல்லாம் மத்திய, மாநில அரசின் கல்வித்துறைகள்தான் முடிவெடுக்க வேண்டும். 

இம்மாதிரியான ஒரு சூழ்நிலையில், நடப்பு கல்வியாண்டை பூஜ்ய ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு தரப்பு கோருகிறது.

பூஜ்ய ஆண்டு

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்தாலும் உருமாறிய கரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

பள்ளிகள் திறக்கப்பட முடியாத நிலையில், மாணவர்களை அடுத்த வகுப்புகளுக்கு மாற்றினால் முந்தைய வகுப்பு கற்றல் அடைவுகள் முழுமையாக பெற்றிராத காரணத்தால் அவர்கள் அடுத்த வகுப்புகளில் பிரச்னைகளை சந்திக்கலாம், அவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும் என்பதை நடப்பு ஆண்டை பூஜ்ய ஆண்டாக அறிவிக்கலாம். அவ்வாறு 2020-21 ஆம் ஆண்டு பூஜ்ய ஆண்டாக அறிவிக்கப்பட்டால் மாணவர்களின் ஒரு ஆண்டு கல்வியில் கணக்கில் கொள்ளப்படாது. 

உதாரணமாக 2020-21 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் 2021-22 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு படிப்பார். இது இடைநிற்றலாகவும் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது. வரும் மார்ச் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழ்நிலையில் நாடு முழுவதும் இம்மாதிரியான ஒரு அறிவிப்பு வெளியாகலாம். 

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டை பூஜ்ய கல்வியாண்டாக அறிவிப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பாதிப்புகள்

தொழில்நுட்ப வசதி இல்லாமை, குடும்பச் சூழ்நிலையில் கல்வி, குழந்தைகளின் ஊட்டச்சத்து, வேலையிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு ஏற்படும் பொருளாதார செலவு, பெற்றோர்- ஆசிரியர் நட்பு பேணுதல் உள்ளிட்ட பிரச்னைகளை இக்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு சமூக, பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

தொழில்நுட்ப வசதி இல்லாத பின்தங்கிய பின்னணியைக் கொண்ட குழந்தைகள் முழுக்கமுழுக்க பள்ளிகளையும், ஆசிரியர்களையும் நம்பியுள்ள சூழலில், அவர்களுக்கான நிலை குறித்து கல்வித்துறை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் மாணவர்களுக்கு அரசே இலவச ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கருவிகளை வழங்கியுள்ளன. அதேபோன்று இந்தியாவிலும் அனைத்து மாணவர்களும் சமமாக டிஜிட்டல் கல்வியை பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலங்களில் டிஜிட்டல் கல்வி முக்கியத்துவம் பெறுவதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுப்புத்தகம், சீருடைகள் வழங்கப்படுவதைப் போன்று ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட கருவிகளை இலவசமாக வழங்கி அவர்களின் தொழில்நுட்ப வசதியை மேம்படுத்தலாம். 

பல குழந்தைகளின் ஊட்டச்சத்து பள்ளிகளில் வழங்கப்படும் உணவுகளையே நம்பியுள்ளது. தற்போது பள்ளிகள் மூடலால் அவர்களின் ஊட்டச்சத்தும், அதன் விளைவாக ஏற்படும் கல்வித் திறனும் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும், வீட்டில் இணைய வசதி இல்லாமல் நூலகங்களை நம்பியிருந்த மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது. ‘டிஜிட்டல் கல்வி’ என்ற புதியமுறை கல்வி அனைவருக்கும் சமஅளவில் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். ‘அனைவருக்கும் கல்வி’ என்ற அரசின் நிலைப்பாட்டை கேள்விகேட்கும் விதமாகவே தற்போதைய தொலைதூரக் கற்றல், சமூகத்தில் ஒரு சமநிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற பேரிடர் காலகட்டத்திலும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்க வருங்காலத்திலாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் கரோனா காலத்தில் வெளியில் செல்லாமல் வீட்டில் முடங்கியிருக்கும் குழந்தைகளின் மனநிலை குறித்தும் பெற்றோர்களும் ஆசிரியர்களும், கல்வித்துறையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டில் கல்வியில் எழுச்சி ஏற்பட்ட காலத்திலிருந்து இதுவரை எந்த தலைமுறையினரும் எதிர்கொள்ளாத ஒரு பிரச்னையை நடப்பு கல்வியாண்டு மாணவர்கள் எதிர்கொண்டுள்ளனர். அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதே ஆரம்பம் முதலே முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், டிஜிட்டல் கல்வியிலும் சமவாய்ப்பு முறையை அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here