மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்; பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்- திமுக அறிவிப்பு. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்; பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்- திமுக அறிவிப்பு.

 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஆதரவைத் தக்கவைக்கும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று அவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,


* ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான கலந்தாய்வில் தற்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் திமுக ஆட்சி அமைந்ததும் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு நடத்தப்படும்.
* 2013 முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச் சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும்.
* ஊர்ப்புற நூலகர்களாகக் கிராமங்களில் பணியாற்றும் நூலகர்களுக்குக் கால முறையிலான பணி வழங்கப்படும்
* பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 80 வயது நிறைந்தவுடன் 20 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி 70 வயது நிறையும் பொழுது 10 சதவிகிதமும், 80 வயது நிறையும் பொழுது மேலும் 10 சதவிகிதமும் ஓய்வூதியம் வழங்கப்படும்.
* புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.
* தமிழக அரசு அலுவலர்களின் பணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க மாநில நிர்வாகத் தீர்ப்பாயமும் தலைமைச் செயலாளர் / துறைச் செயலாளர் / துறைத் தலைவர் தலைமையிலான கூட்டு ஆலோசனைக் குழுக்களும் மீண்டும் அமைக்கப்படும்.
சம வேலைக்கு சம ஊதியம்
* ரூ.8000/- அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அதிமுக ஆட்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அத்தகைய 20,000 ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று திமுக ஆட்சி, அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலமுறை ஊதியம் வழங்கும். ஆசிரியர் பணிக்காலத்தில் உயர்கல்வி கற்று பட்டம் பெறும் ஆசிரியர்களுக்கு திமுக ஆட்சியில் அறிஞர் அண்ணா அறிவித்து வழங்கி வந்த ஊக்கத்தொகை அதிமுக அரசினால் நீக்கப்பட்டுவிட்டது. இந்த ஊக்கத்தொகை மீண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.
* பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு, மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்குப் பாதிப்பிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யப்படும்.
* தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாகப் பணியமர்த்தி, காலமுறை ஊதியம் வழங்கப்படும். அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்கப்படும்.
* அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பணிக் காலத்தில் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்குத் தற்போது வழங்கப்பட்டுவரும் குடும்ப நலநிதி ரூபாய் 3 லட்சம் என்பது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* அதிமுக அரசினால் பழிவாங்கும் நோக்கத்தில் வேலைநீக்கம் செய்யப்பட்ட மக்கள்நலப் பணியாளர்கள் இயற்கை எய்தியிருந்தால் அவர்களது வாரிசுக்கு அரசு வேலை வழங்குவதோடு, குடும்ப நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
* பள்ளிக் கல்வித்துறையில் பகுதி நேரப் பணியாளர்களாகப் பணிபுரிந்து நிரந்தரமாக்கப்பட்ட தொழிற் கல்வி ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் 50 விழுக்காடு பகுதிநேரப் பணிக் காலத்தை ஓய்வூதியம் நிர்ணயிப்பதற்குக் கணக்கில் எடுத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* கதர் கிராமத் தொழில் வாரியத் தொழிலாளர்கள், சுகாதாரத் துறையில் பணியமர்த்தப்பட்ட கொசு ஒழிப்புப் பரிசோதகர்கள், வேளாண்மை விதை சுத்திகரிப்பு நிலையத் தொழிலாளர்கள் போன்றோரின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய முறையில் நிறைவேற்றப்படும்.
* அரசுப் பணியாளருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குடும்ப மருத்துவச் செலவு வரம்பை உயர்த்துவதுடன், அறுவை சிகிச்சைக்கு மட்டுமின்றித் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்ந்து சிகிச்சை பெறும் அனைத்து வகையான மருத்துவ செலவினங்களும் அடங்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஆதரவு திமுகவுக்கு அதிகமாக இருப்பது வழக்கம். இதைத் தக்கவைக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here