கடந்த ஆண்டு 11ம் வகுப்பில் அறிவியல் மற்றும் கலை பிரிவில் இடைநின்ற மாணவர்கள் நடப்பாண்டில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக கல்வித்துறையில் குழப்பம் எழுந்துள்ளது.
அனைவரும் தேர்ச்சி:
தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த கல்வியாண்டின் இறுதியில் பரவத் தொடங்கியது. 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பொதுத்தேர்வை எழுதினர். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி நாள் தேர்வுகளான வேதியியல் மற்றும் வணிகவியல் தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்குள் முழு ஊரடங்கு உத்தரவுகள் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டது. வேதியியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
இதனால் 11ம் வகுப்பில் அரையாண்டு தேர்வுகளுக்கு பின்னதாக இடைநின்ற மாணவர்களுக்கும் குறிப்பிட்ட பாடங்களில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால், தேர்ச்சி பெற்று இவர்களின் பெயர்களும் 12ம் வகுப்பில் சேர்க்கப்பட்டது. தற்போது 2020-2021 ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 10 மற்றும் 11ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
அந்த மதிப்பெண்களின் படி, தேர்ச்சி பெறாவிட்டாலும் குறைந்தது 35 மதிப்பெண்கள் வழங்கி மாணவர்கள் தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த ஆண்டு 11ம் வகுப்பில் வேதியியல் மற்றும் வணிகவியல் பாடங்கள் உள்ள இடைநின்ற மாணவர்கள் தற்போது 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாண்மை மற்றும் பொறியியல் பாடப்பிரிவுகளில் இடைநின்ற மாணவர்கள் தங்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக தேர்வுகள் துறை இயக்குனருக்கு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக