நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கட்டணம் வசூலிக்கலாம் - உயர்நீதிமன்றம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கட்டணம் வசூலிக்கலாம் - உயர்நீதிமன்றம்

 


.com/

* கொரோனாவால் வருவாய் இழந்தவர்களிடம் 75%

* 6 தவணைகளில் செலுத்தலாம்

* சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் கொரோனா ஊரடங்கால் வருமானம் பாதிப்பு இல்லாத அரசு ஊழியர்களிடம் 85 சதவீத கட்டணமும், வருவாய் இழந்து தவித்த பெற்றோர்களிடம் 75 சதவீத கட்டணத்தையும் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா  தொற்றால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தமிழகத்தில் திமுக அரசு எடுத்த அதிரடி  நடவடிக்கையால் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்றால்  பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

 இந்நிலையில், ஊரடங்கு காரணமாக  மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து  கடந்தாண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை முறையே 40, 35 சதவீதம்  என்று இரு தவணைகளாக வசூலித்துக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது.  இந்த  வழக்குகள், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு  வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் சேவியர் அருள்ராஜ், சிலம்பண்ணன், இ.விஜய் ஆனந்த், எம்.புருஷோத்தமன் உள்ளிட்டோர் ஆஜராகினர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், அரசு வக்கீல் ஆ.செல்வேந்திரன், சிபிஎஸ்இ தரப்பில் நாகராஜன் ஆஜராகினர்.

அப்போது, தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வக்கீல், ‘பள்ளிகள் 85 சதவீத  கட்டணத்தை வசூலித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டணம்  செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். கட்டண  சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்’ என்றார்.  தமிழக  அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘ஐகோர்ட்  பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடப்பு (2021-22) கல்வியாண்டிலும்  2019-20ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க  அனுமதியளித்து ஜூலை 5ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது. தமிழகத்தை பொறுத்தவரை  கட்டண நிர்ணய குழு அளித்த பரிந்துரைகளையே அரசு பரிசீலிக்கும். கட்டண நிர்ணய  குழுவில் உள்ள காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்’ என்று  உறுதியளித்தார். அப்போது, மாணவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசு  நிர்ணயிக்கும் கட்டணமே பொருந்தும் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: கொரோனா ஊரடங்கால் வருமானம் பாதிப்பு அடையாத ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வணிகம் செய்பவர்களிடம் கடந்த 2019-20ம் கல்வி ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 85 சதவீதத்தை தனியார் சுயநிதி பள்ளிகள் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும்.

கடைசி தவணையை பெற்றோர்கள் 2022 பிப்ரவரி 1ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்களிடம் 2019-20ம் கல்வி ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தில் 75 சதவீதத்தை 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும். இந்த தவணையின் கடைசி தவணை 2022 பிப்ரவரி 1ம் தேதிக்கு முன்பு செலுத்தப்பட வேண்டும். வேலை இழப்பு போன்ற காரணங்களால் கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் கட்டண சலுகை குறித்து கோரிக்கை வைக்கலாம்.2020-21ம் ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்தாத பெற்றோர்களிடம் அந்த தொகையை தவணை அடிப்படையில் பள்ளிகள் வசூலித்துக்கொள்ளலாம்.

ஒட்டுமொத்த கட்டணத்தையும் ஏற்கனவே செலுத்தியவர்கள் அந்த கட்டணத்தை திரும்ப கோர முடியாது. கட்டணத்தை கட்டாத மாணவர்களை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்பதை பள்ளி நிர்வாகங்கள் தடுக்க கூடாது. கட்டணத்தை காரணம் காட்டி அந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றோ, தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்றோ தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் பள்ளிகள் மாணவர்களுக்கு கூடுதல் கட்டண சலுகை வழங்குவதற்காக எந்த முறையையும் கையாளலாம்.

பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகங்களுக்கும் கல்வி கட்டணம் தொடர்பாக ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் பெற்றோர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுக்கலாம். மாணவர்களை எந்த சூழ்நிலையிலும் 2021-22ம் கல்வி ஆண்டில் பள்ளிகளில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது. இதை சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு அதே பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் அந்த மாணவர்களுக்கு அரசு பள்ளியிலோ, மாநகராட்சி பள்ளியிலோ, ஊராட்சி பள்ளியிலோ இடம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் 25 சதவீத மாணவர்களுக்கான கட்டணத்தை மாநில அரசு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.

சிபிஎஸ்இ பள்ளிகள் 2021-22ம் கல்வி ஆண்டுக்கான கட்டணம் வசூல் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் 4 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். கட்டண நிர்ணயத்தில் ஏதாவது பிரச்னை இருந்தால் பள்ளி நிர்வாகங்கள் கட்டண நிர்ணய குழுவை அணுகி தீர்வு பெறலாம்.  பள்ளியிலிருந்து விலக விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த மாணவர்கள் புதிதாக சேரவுள்ள பள்ளிகள் மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் கட்டாயம் என்று கூறாமல் சேர்க்கை வழங்க வேண்டும். பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழுவில் காலியாக உள்ள பணியாளர் இடங்களை நிரப்பி குழு முழு அளவில் செயல்பட மாநில அரசு 8 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகள் குறித்து பள்ளிகளுக்கு தெரியப்படுத்துவதற்கான புதிய சுற்றறிக்கையை தமிழக அரசு 2 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

கட்டணத்தை கட்டாத மாணவர்களை நேரடியாகவோ,  ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்பதையோ பள்ளி நிர்வாகங்கள்  தடுக்க கூடாது. கட்டணத்தை காரணம் காட்டி அந்த மாணவர்களை தேர்வு எழுத  அனுமதிக்கவில்லை என்றோ, தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்தி  வைத்துள்ளனர் என்றோ தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கல்வித்துறை  அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here