கிராமப்புறங்களில் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களுக்கு அஞ்சல் அட்டை மூலம் பாடம் நடத்தும் தமிழாசிரியை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கிராமப்புறங்களில் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களுக்கு அஞ்சல் அட்டை மூலம் பாடம் நடத்தும் தமிழாசிரியை

 16264413522484

கரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் சூழலில், ஸ்மார்ட் போன் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு அஞ்சல் அட்டை மூலம் பாடம் கற்பிக்கிறார் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை  மகாலட்சுமி.

கரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம், கல்வித் தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும் அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன்  இல்லாததால் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்களை அறிந்தனர். மேலும் சில மாணவர்களின் இல்லங்களில் தொலைக்காட்சி இல்லாமலும், தொலைக்காட்சி இருந்தாலும் கேபிள் இணைப்பு இல்லாததாலும் அவர்களாலும் பாடங்களைச் சரிவரக் கற்க முடியவில்லை. இருப்பினும் அரசு அனைத்து வகுப்பு மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிட்டது.


நடப்புக் கல்வியாண்டு தொடங்கிய போதிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மாறாக மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. புத்தகங்கள் வழங்கப்பட்ட போதிலும் அவற்றைக் கற்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தாங்களாகவே முன்வந்து மாணவர்களின் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று, பாடம் நடத்தும் பணியை ஓசையின்றிச் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமி, சற்று வித்தியாசமாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார்.

அதாவது கிராமப்புற மாணவர்களிடத்தில் ஸ்மார்ட் போன்  இல்லாத நிலையில், அவர்களின் இல்லங்களுக்குச் சென்று அப்பகுதி மாணவர்களை ஒரு இடத்திற்கு வரவழைத்துப் பாடம் நடத்துகிறார். பாடம் நடத்தி முடித்தவுடன் அவர்களிடத்தில், தனது வீட்டு முகவரியிட்ட 50 பைசா அஞ்சல் அட்டையை கொடுத்து, அதில் மாணவர்களுக்கு எழும் சந்தேகத்தை எழுதி அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.

அதேபோன்று மாணவர்களிடத்தில் அவர்கள் வீட்டு விலாசத்தையும் பெற்றுக்கொண்டு, வீட்டில் ஸ்மார்ட் போன் இல்லாத தொலைபேசி எண்ணையும் வாங்கிக் கொள்கிறார். இதன்மூலம் மாணவர்கள் வீட்டில் பயிலும்போது எழும் சந்தேகங்களை, சிறு குறிப்பாக எழுதி அஞ்சல் அட்டை  மூலம் தனக்கு அனுப்பும்பட்சத்தில் அவர்களுக்கு அதே அஞ்சலட்டை மூலம் பதிலளிக்க வாய்ப்பு ஏற்படுகிறது என்கிறார்.


இதுகுறித்து அவரிடமே பேசினோம். ''தற்போது மாணவர்களிடத்தில் எழுதும் திறன் குறைந்து வருகிறது. மேலும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களுடனான தொடர்பும் குறைந்துவிட்டது. அதனால்தான் அரிதாகிப் போன அஞ்சல் அட்டையின் பயன்பாடு குறித்து மாணவர்கள் அறியும் வகையிலும், அதன்மூலம் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களுக்கு பாடம் நடத்தும் வகையிலும் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்.

இதன் மூலம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் இல்லாத குறை நிவர்த்தியாவது மட்டுமல்ல, அதை அந்த மாணவர் ஆண்டு முழுவதும் வைத்துப் பாதுகாத்து, தேர்வு நேரத்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் கடிதம் எழுதும் திறன் மேம்படும்.

எனது இந்தப் பணிகளுக்கு எனது கணவரும் உறுதுணையாக இருப்பது, மேலும் உத்வேகத்தைக் கொடுத்து வருகிறது'' என்று ஆசிரியர் மகாலட்சுமி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here