சென்னை: தமிழக பாடநூல் நிறுவனம், கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரான திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்கு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனம் ஆகும். இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடநூல்கள், சிறுபான்மை மொழிப் பாடநூல்கள், மேல்நிலைப் பள்ளிக்கான தொழிற்கல்விப் பாடப்புத்தகங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப் புத்தகங்கள் மற்ரும் பல்நுட்ப கல்லூரிக்கான பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியை இக்க்ழகம் திறம்பட மேற்கொண்டு வருகிறது. 1960 மற்றும் 1970-ம் ஆண்டுகளில் வெளிவந்த பாடநூல்களை மீட்டுருவாக்கம் செய்து, இணையத்தில் கொண்டு வரும் ஐந்தாண்டுத் திடத்தை 2017-ல் இருந்து இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் பல்வேறு அரிய நூல்களை மறுபதிப்பு செய்யும் பணிகளை மேற்கொள்வதோடு மொழி பெயர்ப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள, இந்த நிறுவனத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திண்டுக்கல் ஐ. லியோனி, சிறந்த ஆசிரியர்; மேடைப் பேச்சாளர்; இலக்கிய சொற்பொழிவாளர். நகைச்சுவைப் பட்டிமன்ற நடுவர் ஆவார். இவருக்கு 2010-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக