பைந்தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் படம்: இளைஞருக்கு தமிழக முதல்வர் பாராட்டு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பைந்தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் படம்: இளைஞருக்கு தமிழக முதல்வர் பாராட்டு

 


காஞ்சிபுரம்: பொன்னேரி கரை தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் குடியிருப்பை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி முருகம்மாள். இவர்களது இளைய மகன் கணேஷ் (25), சிவில் டிப்ளமா படித்துவிட்டு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட கணேஷ், தனது நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினருக்கு ஓவியம் வரைந்து கொடுப்பார். இந்நிலையில் ஓவியத்தின் மீது உள்ள தனியாத தாகத்தால் பணி முடிந்து ஓய்வு நேரங்களில் தொடர்ந்து சார்கோல் ஆர்டிஸ்ட் எனும் பென்சில் வரைவு ஓவியங்களை வரைந்து வந்தார். இதையொட்டி சினிமா நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, இசையமைப்பாளர் இளையராஜா, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், புத்தர் போன்றோரின் ஓவியங்களை தத்ரூபமாகவும், கலைநயமிக்கமாகவும் வரைந்து அசத்தியுள்ளார். இதுபோல் அவர் வரையும் ஓவியங்களை, தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்கிறார். இந்நிலையில் கணேஷ், தமிழ் எழுத்துக்கள் 247, தமிழ் வட்டெழுத்துக்கள், தமிழி எழுத்துக்கள் உள்பட 741 எழுத்துக்களால் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் உருவத்தை அழகான ஓவியமாக வரைந்தார். அதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பகிர்ந்தார். இதைக் கண்ட முதலமைச்சர், ”அன்பின் வழியது உயர்நிலை ” என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துக்களால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்! என வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.முதலமைச்சர் பாராட்டியது, தனக்கு மிகுந்த நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கணேஷ் தெரிவித்தார். அவரை தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். தற்போது வாழ்வாதாரத்திற்காக தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாலும், தனது ஓவியத் திறமைக்கு ஏற்றார் போல கலைத்துறை தொடர்புடைய பணியினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென கணேஷ் கோரிக்கை வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here