டோக்கியோ,
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் 57 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
நடப்பு உலக சாம்பியனான ரஷ்யாவின் ஜாவுர் உகுவேவை எதிர்கொண்ட அவர், இந்த போட்டியில் 4-7 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்துள்ளார். இதனால், இந்தியாவுக்கு 2வது வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த போட்டியில் சுசில் குமாருக்கு அடுத்து வெள்ளி பதக்கம் வென்ற 2வது இந்தியர் தாஹியா ஆவார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் வரிசையில் ரவி, 4வது இந்தியர் மற்றும் ஒட்டு மொத்தத்தில் 5வது இந்தியர் ஆவார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
இந்த நிலையில், தாஹியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில், ரவிக்குமார் தாஹியா ஒரு குறிப்பிடத்தக்க மல்யுத்த வீரர் ஆவார். விளையாட்டில், அவருடைய போராட்ட குணமும், உறுதி தன்மையும் தனிச்சிறப்பு வாய்ந்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற அவருக்கு என்னுடைய பாராட்டுகள். அவரது சாதனையில் இந்தியா பெருமிதம் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக