ஆலங்குளம்: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் கூடுதல் கட்டிடம் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கீழ்புறம் உள்ள தொட்டியான் குளத்தின் புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டு இயங்கிவருகிறது. இங்கு 3 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். குளத்தின் உள் பகுதியில் இந்த பள்ளிக் கட்டிடம் அமைந்துள்ளதால் சுற்றிலும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதுடன் அனுமதியின்றி வளர்க்கப் படும் பன்றிகளும் இந்த வளாகத்தில் சுற்றித் திரிகின்றது.கொரனோ காலத்தில் அடைக்கப்பட்ட இந்த பள்ளி மீண்டும் துவங்கியது. தற்போது மழை நீர் பள்ளி வளாகத்திற்குள் புகுந்ததால் மீண்டும் பள்ளி திறக்கப்பட வில்லை. இதனால் அந்த மாணவர்கள் பழைய பள்ளி கட்டத்திற்கே சென்று படித்து வருகின்றனர்.அங்கு போதிய இடவசதி இல்லாததால் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்துவருகிறது. இதனால் மாணவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் சூழ்ந்து பள்ளி மூடப்பட்டுள்ளதால் இப் பள்ளி வளாகத்தை சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெய்துவரும் பருவ மழையால் தொட்டியான் குளத்தில் தண்ணீர் அதிகளவில் பெருகி உள்ளது. இதனால் பள்ளி சுற்று சுவர் உள்ளே தண்ணீர் ஊற்று எடுத்து முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருகி உள்ளது. அவ்வப்போது பாம்புகளும் இங்கு நுழைந்து அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்புகளில் மழை நீர் புகுந்து மாணவர் களின் படிப்பை பாதிக்கின்றது. பள்ளியை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றி சுகாதாரம் பேண வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: Dinakaran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக