தமிழக அரசு - ஆசிரியர்களுடன் நேரிடையாகப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்; ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
இது தொடர்பாக இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: ''தமிழகத்தில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் அரசு ஆசிரியர்களுக்கான தர ஊதியம், படி நிர்ணயம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களை தகுதித் தேர்வு முறையில் தேர்ந்தெடுப்பதை தவிர்க்க வேண்டும். தமிழகப் பள்ளிகளில் தமிழ் பாடத் திட்டத்தை கட்டாயமாக்க வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டு, பணிபுரியும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு அவர்களை நியமனம் செய்த தேதி முதல் கால முறை ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு நிலை, தேர்வு நிலைக்கு தனி ஊதிய விகிதம், தர ஊதிய நிர்ணயம் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை தவிர்த்து பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும். இதனால் 40,000 ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவார்கள். மேலும் இன்றைக்கு அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு, பயிற்சிக் கூடம், விளையாடும் இடம், கழிப்பிட வசதி, போதிய இட வசதி போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் முழுவதும் நிரப்பப்படாமல், ஆசிரியர் பற்றாக்குறையும் இருக்கின்றது. இது போன்ற 15 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி, போராடி வருகிறார்கள். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது குறைந்து கொண்டே வருகின்றது. அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளோடு, கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும். மாணவர்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். நேற்றைய தினம் அரசு ஆசிரியர்கள் தமிழக அரசின் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் நாளை (வியாழக்கிழமை) ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். எனவே தமிழக அரசு - அரசு ஆசிரியர்களுடன் நேரிடையாகப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். ஆசிரியர்களின் பணி மிகச் சிறப்பானது. மாணவர்கள் கல்வி கற்பதற்கு எந்தவிதத்திலும் தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக இந்த பிரச்சினையில் தமிழக கல்வித் துறை அமைச்சர் நேரிடையாக அரசு ஆசிரியர் சங்கத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, நிறைவேற்றி மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் காத்திட வேண்டும்'' என்று ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக