தவறான உணவுப் பழக்கம்: இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு காரணம்!!!
தவறான உணவுப் பழக்கங்களாலேயே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 8 நகரங்களில் உள்ள 4000 சர்க்கரை நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. உணவு, மசாலா மற்றும் சர்க்கரை என்ற தலைப்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில், இந்தியர்கள் உட்கொள்ளும் சாதம், மாவுப் பொருட்கள் அல்லது உப்புமா என அனைத்து உணவுப் பொருட்களிலும் கார்போஹட்ரேட்களே அதிகம் நிறைந்துள்ளது, அதிக கலோரிகளை கொண்ட உணவுகள், குறைந்த அளவிலான நார்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வதே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் தினமும் 48 சதவீதம் அரிசி பொருட்களை எடுத்துக் கொள்வதாகவும், வெள்ளை அரிசி, ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிப்பதாகவும் சென்னைச் சேர்ந்த டாக்டர் வி.மோகன் தெரிவித்துள்ளார். நகர்ப்புறங்களில் உள்ள 10ல் 7 பேருக்கு தாங்கள் எதை, எந்த அளவில் உண்கிறோம் என்ற கவனம் சிறிதளவேனும் உள்ளது. இதனால் 60 சதவீதம் கார்போைஹட்ரேக்களை சேர்த்துக் கொள்கிறார்கள். மும்பைவாசிகள் 70 சதவீதமும், சென்னை வாசிகள் 84 சதவீதமும் தங்களின் உணவில் கார்போைஹட்ரேட்களை எடுத்துக் கொள்கின்றனராம். இந்தியர்களின் சர்க்கரை நோய் அதிகரிப்பிற்கு மற்றொரு முக்கிய காரணம், அவர்கள் உணவு உட்கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம். பெரும்பாலான இந்தியர்கள் வேகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டிருப்பதால் அவர்களின் கணையம் போதுமான அளவு இன்சுலீனை சுரப்பதில் சிரமப்படுகிறது. இதனால் அதிகப்படியாக சர்க்கரை ரத்தத்தில் கலக்கிறது என இந்திய சர்க்கரை நோய் கழகத்தின் தலைவர் டாக்டர்.ஷாஷன்க் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்திய சர்க்கரை நோயாளிகள் போதிய கால இடைவெளியில் உணவு எடுத்துக் கொள்வதில்லை என டாக்டர்.ஜோஷி தெரிவித்துள்ளார். ஆய்வு அடிப்படையில், தூங்கி எழுந்த பிறகு காலை உணவு எடுத்துக் கொள்ள மும்பைவாசிகர் இரண்டே முக்கால் மணிநேரமும், ஐதராபாத் வாசிகள் 3 மணி நேரத்திற்கு அதிகமாகவும் எடுத்துக் கொள்வது தெரிய வந்துள்ளது. 80 சதவீதம் மக்கள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை உணவு உட்கொள்கிறார்களாம். முதலில் உட்கொண்ட உணவு முழுமையாக செரிப்பதற்குள் அடுத்த வேளை உணவை எடுத்துக் கொள்வதும் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் அதிகம் வருவதற்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அளவில்லாத உணவை எடுத்துக் கொள்வதும் இந்தியர்களுக்கு சர்க்கரை அதிகரிக்க காரணம் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக