பள்ளிகளுக்கு ஆய்வக கருவிகள் மற்றும் நுாலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக, 'வாட்ஸ் ஆப்'பில் பரவி வரும், மாவட்ட அதிகாரியின் பேச்சு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், அரசு பள்ளிகளில், 9, 10ம் வகுப்புகளுக்கும், 8ம் வகுப்பில் இருந்து, 10ம் வகுப்பு வரை, தரம் உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும், ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில், மத்திய அரசின் நிதி வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளிக்கும், ஆண்டுதோறும் அறிவியல் உபகரணங்கள் வாங்க, 25 ஆயிரம் ரூபாய், நுாலகத்துக்கு புத்தகங்கள் வாங்க, 10 ஆயிரம் ரூபாய் நேரடியாக பள்ளிகள் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளில், 12 ஆயிரத்து, 300 பள்ளிகளுக்கு, 184 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசு விதிகளின் படி, வெளிப்படையாக, 'டெண்டர்' அறிவித்து, தகுதியான நிறுவனத்திடம், குறைந்த தொகைக்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நடைமுறை, காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மை குழு தான், பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்க முடிவு செய்ய வேண்டும். ஆனால், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மிரட்டப்பட்டு, விருதுநகரிலுள்ள, 'சயின்டிபிக் சென்டர்' என்ற நிறுவனம் அளிக்கும் பொருட்களை வாங்கி, காசோலையை வழங்க நிர்பந்திக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அந்த நிறுவனத்திலிருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு, 'பரிசு'அளிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தஞ்சை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர், பெற்றோர் கூட்டியக்கம், அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டி சுவரொட்டிகளை ஒட்டி உள்ளது.
இதை அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர், ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருடன் மொபைல் போனில் பேசியுள்ளார்.அப்போது, 'இந்த முறைகேடு, 5 ஆண்டுகளாக நடக்கிறது; நான், தற்போது தான் பதவிக்கு வந்துள்ளேன்; என்னை மட்டும் குற்றம் சொல்வதா...' என, பேசியுள்ளார். இந்த உரையாடல், 'ஆடியோ' வாட்ஸ் ஆப் எனப்படும், மொபைல் போன் அப்ளிகேஷனில் பதிவு செய்யப்பட்டு, ஆசிரியர்கள் மத்தியில் பரவியுள்ளது.இதுகுறித்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் பரவிய கருத்துக்கு, 'கமென்ட்' அளித்த, இளம் ஆசிரியை ஒருவரை, சேலம் கல்வி அதிகாரி ஒருவர் போனில் மிரட்டும் உரையாடலும், வாட்ஸ் ஆப்பில் பரவியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக