பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக திறனாய்வுத் தேர்வு நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் செவ்வாய்க்கிழமை நடந்தது. அதில் மாவட்டம் முழுவதும் இருந்து 170 பேர் கலந்து கொண்டனர்.
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர வேண்டும் என்பதற்காக, சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. அதற்காகத் தேர்வு மூலம் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து மாவட்டத்தில் உள்ள சிறந்த அரசுப் பள்ளியில் சேர்த்து, உண்டு உறைவிட வசதி ஏற்படுத்தி, அதில் மாணவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி நன்கு தயார் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட கல்வித்துறை, கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயல்படுத்தி பல மாணவர்களை மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து, சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு நாமக்கல் அரசு மகளிர் மற்றும் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடந்தது. 5 பாடங்களுக்கு நடந்த இந்த தேர்வில், ஒவ்வொரு பள்ளிக்கும் சிறந்த மாணவர்கள், இரண்டு பேர் வீதம் மொத்தம் 170 பேர் கலந்து கொண்டனர். இதில் சிறந்த 40 முதல் 45 மாணவர்கள் வரை தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்பவர்களை மாவட்டத்தில் உள்ள சிறந்த அரசுப் பள்ளியில் சேர்த்து அந்தந்தப் பாடங்களில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தி தேர்வுக்கு தயார்படுத்தப்படுவர். அதற்கென பள்ளியில் உண்டு, உறைவிடப்பள்ளி தனியாக ஏற்படுத்தப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக