விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை கண்காணிப்பது மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு, பணப் பலன்கள் தொடர்பான கோப்புகள் தேங்கிக் கிடப்பதால், காலியாக உள்ள 4 கல்வி அதிகாரிகளின் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் ஆகிய கல்வி மாவட்டங்கள் உள்ளன.
அதே போல், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் பள்ளிகள் இயங்குகின்றன. இந்நிலையில் இம்மாவட்டத்தில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர், விருதுநகர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பள்ளிகளை ஆய்வு செய்வது, பள்ளி கல்வித் துறை வழங்கும் உத்தரவுகளை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து நடைமுறைப்படுத்துவது, அரசு சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் 14 நலத் திட்ட உதவிகளை ஆய்வு செய்வது, ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்குவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கோப்புகளை கண்காணிப்பது ஆகிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அந்த 4 கல்வி அதிகாரிகளின் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக