மத்திய அரசு 7-வது ஊதியக்குழு பரிந்துரையை 7 மாத கால பரிசீலனைக்குப்பின் அப்படியே ஏற்றிருப்பது வேதனையளிப்பதாக உள்ளது என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மன்னை மனோகரன் நீடாமங்கலத்தில் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: கடந்த வருடம் நவம்பர் மாதம் மத்திய அரசு பெற்ற 7-வது ஊதியக்குழு பரிந்துரையை 7 மாத கால பரிசீலனைக்குப்பின் அப்படியே ஏற்றிருப்பது வேதனையளிக்கிறது.
ஊதிய உயர்வு 23.55 சதம் என்பது தவறு. தற்சமயம் 15 ஆயிரத்து 750 ரூபாய் வாங்கும் கடைநிலை ஊழியர்களின் ஊதியம் 18 ஆயிரம் ரூபாயாக உயர்கிறது. இது 14.22 சதவிகித ஊதிய உயர்வு. மேலும் உயரும் இந்த 2 ஆயிரத்து 250 ரூபாய் ஊதியத்தில் தொழிலாளர்களுக்கான கூட்டு காப்பீடு திட்ட ப்ரீமியத்தொகை ஆயிரத்து 500 ரூபாய் பிடித்தம் செய்ய ஊதியக்குழு பரிந்துரைத்திருக்கிறது. தற்சமயம் அந்த பிடித்தத் தொகை வெறும் 15 ரூபாய்தான். மேலும் புதிய பென்ஷன் திட்டத்திற்கான பிடித்தம் 10 சதம் என்பதால் தற்சமயம் 700 ரூபாயாகவுள்ள பிடித்தம் ஆயிரத்து 800 ரூபாயாக உயருகிறது. எனவே, மொத்தத்தில் ஊதிய உயர்வு இல்லை. அதேசமயம் அதிகாரிகளுக்கும், கேபினட் செயலர்களுக்கும் 11.4 மடங்கு ஊதிய உயர்வு கிடைத்திருக்கிறது. மேலும் நடைமுறையில் உள்ள 52 அலவன்சுகள் ரத்து, பேரிடர் கால பண்டிகைக்கால முன்பணம் ரத்து, குறிப்பிட்ட கால பதவி உயர்விற்கு தரும் நிபந்தனைகள் மேலும் பெண் ஊழியர்களின் குழந்தை பராமரிப்பிற்கான விடுப்பில் 20 சதவிகிதம் ஊதியப் பிடித்தம் என நடைமுறை சலுகைகளையும் இந்த ஊதியக்குழு பறித்து விட்டது. கடந்த 70 வருட காலத்தில் இதுவே மிகக் குறைவான ஊதிய உயர்வும், மிக மோசமான ஊதியக்குழு பரிந்துரையும் ஆகும். எனவே தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் இதனை கடுமையாக எதிர்க்கிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக