அறிவாலயத்திற்கு வந்த அமெரிக்க அழைப்பு .....இளம் தலைவர்கள் மாநாட்டில் பிரசன்னா - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அறிவாலயத்திற்கு வந்த அமெரிக்க அழைப்பு .....இளம் தலைவர்கள் மாநாட்டில் பிரசன்னா

! அமெரிக்காவில் ஒருமாத காலம் நடக்கவிருக்கின்ற 'இளம் அரசியல் தலைவர்கள் மாநாட்டில்' பங்கேற்கத் தேர்வாகி இருக்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா. ' இதன் மூலம் அமெரிக்க அரசின் வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்தை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது' என்கிறார் அவர். அமெரிக்க நாட்டின் கல்வி மற்றும் கலாசாரத் துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் 'இளம் அரசியல் தலைவர்கள் மாநாடு' நடைபெறுவது வழக்கம். கடந்த 74 ஆண்டுகளாக இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மாநாடு நடைபெற இருக்கிறது. அரசியல், ஊடகம், கல்வி, பொருளாதாரம், பொது சுகாதாரம், மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்க அரசு தேர்வு செய்கிறது. இந்தமுறை ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் தமிழரான பிரசன்னா மட்டுமே பங்கேற்கிறார். பிரசன்னாவிடம் பேசினோம். " ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்ற அமெரிக்க தூதரக அதிகாரிகள், இளம் அரசியல் தலைவர்களின் தீவிரமான செயல்பாடுகளைக் கவனித்து வருவார்கள். பேச்சு, எழுத்து, விவாதம் போன்றவற்றில் அவர்கள் செயல்படும் தன்மையைப் பொறுத்து, மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பார்கள். இந்தமுறை நான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து என்னுடைய அரசியல் பணி, வெளிப்படையான நிர்வாகம் குறித்த பார்வை ஆகியவை குறித்து ஒன்றரை மணி நேரம் தொலைபேசியில் நேர்காணல் நடத்தினார்கள். அரசியல் பாதையைத் தேர்வு செய்தது குறித்து விரிவாக அவர்களிடம் விவாதித்தேன். இறுதியாக நான் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வந்தது. ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் மாநாடு தொடங்க இருக்கிறது. அட்லாண்டா, கொலம்பியா, வாஷிங்டன் உள்ளிட்ட இடங்களில் பயணம் செய்ய இருக்கிறேன். அங்குள்ள அரசு நிர்வாகங்கள் செயல்படும் விதம், வெளிப்படைத்தன்மையை வளர்த்தெடுக்கும்விதம் போன்றவற்றைப் பார்வையிடவும் அனுமதி அளித்துள்ளனர். நம்முடைய அரசாங்கத்தில் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரையில் அரசு நிர்வாகங்கள் செயல்படும் தன்மையைப் பற்றியும் விரிவாகப் பேச இருக்கிறேன்" என்றவர், " இதுகுறித்து தலைவர் கலைஞரிடம் தெரிவித்தேன். அவர் என்னிடம், ' இதுபோன்ற அழைப்புகள் நம்முடைய கழகத்தைச் சேர்ந்தவருக்கு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி. கிடைக்கும் வாய்ப்பில் சிறப்பாக பேசிவிட்டு வா' என வாழ்த்தினார். பொருளாளர் ஸ்டாலினும் வாழ்த்தினார். எந்த ஓர் அரசியல் பின்புலமோ பணபலமோ இல்லாமல் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினேன். அந்நாட்டு அரசின் வெளிப்படையான நிர்வாக அமைப்புகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்" என்றார் நெகிழ்ச்சியோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here