மாணவர்கள் கதறல் மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை அறியாத அரசு பள்ளி ஆசிரியர், தன் மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களை விரைவில் நடத்தி முடிப்பதாகவும், இதற்காக தனி வகுப்பு எடுப்பேன் என்று உருக்கமாக பேசியிருந்தை கேட்டு நெகிச்சியடைந்த மாணவர்கள், அவர் இறந்துவிட்டதாக செய்தி அறிந்ததும் கதறினர். புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு கிழக்கு செல்லையா மகன் ரவிச்சந்திரன் (50). விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை உயிரியல் ஆசிரியராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆசிரியர் ரவிச்சந்திரன் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக வந்த பிறகு 7 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு செல்ல துணையாக இருந்துள்ளார் என்றும் அவரது பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சியும் மதிப்பெண்ணும் வாங்க சிறப்பாக பாடம் நடத்தினார் என்றும் மாணவர்கள், சக ஆசிரியர்கள் கூறினார்கள்.
இந்த நிலையில் ஆசிரியர் ரவிச்சந்திரன் கடந்த வாரம் காய்ச்சல் என்று திருச்சி தனியார் மருத்தவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீராக கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சுமார் ரூ. 90 லட்சம் வரை செலவாகும் என்று சொன்னதால் எங்கள் ஆசிரியர் உயிரை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் கருணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11, 12 ம் வகுப்பு மாணவர்கள் 400 பேர் முதலமைச்சருக்கு கண்ணீருடன் தனித்தனியாக கோரிக்கை மனு எழுதினார்கள். அதே போல ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்களும் கோரிக்கை மனு அனுப்பினார்கள். அதன் பிறகு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த தகவல் செய்திகளாக வெளிவந்த நிலையில் முதலமைச்சர் உத்தரவு படி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆசிரியர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சிகிச்சைக்காக சிறப்பு மருத்தவர்கள் குழு அமைக்கப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் தொடர்ந்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று திடீரென சிகிச்சை பலனின்றி ஆசிரியர் ரவிச்சந்தரன் பரிதாபமாக உயிரிழந்தார். ஆசிரியர் ரவிச்சந்திரன் சிகிச்சை பெற்று உடல் நடமுடன் வந்து மீண்டும் பாடம் நடத்த வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியதுடன் சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில் ஆசிரியர் விரைவில் குணமடைய வேண்டும் சிறப்பு வழிபாடுகளையும் மாணவர்கள் நடத்தினார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவல் அறிந்ததும் மாணவர்கள் வகுப்பறைகளில் கதறி அழுதனர். இந்த சம்பவம் ஆசிரியர்களையும் கண் கலங்க செய்தது. ஒரு ஆசிரியருக்காக மாணவர்களும், சக ஆசிரியர்கள், பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கண்ணீர் விடுவது அனைவரையும் நெகிழச் செய்யும் நிகழ்வு தான். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மேகநாதன் கூறும்போது, நேற்று முன்தினம் மதியம் ஆசிரியர் ரவிச்சந்திரன் என்னிடம் 15 நிமிடம் போனில் பேசினார். “எனக்காக மாணவர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியதால் முதலமைச்சர் தனிக்கவணம் செலுத்தி அமைச்சரை நேரில் அனுப்பி சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளார்கள். உடல் நலமடைந்து வருவதாக அறிகிறேன். இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு வந்து உடனே பள்ளிக்கு வந்துவிடுவேன்”. மாணவர்களிடம் சொல்லுங்கள் ஒரு வாரத்தில் வந்து அவர்களுக்கு பாடம் நடத்துவேன் மேலும் இதுவரை தேங்கியுள்ள பாடத்தையும் சனி, ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் எடுத்து விரைவில் பாடங்களை முடித்து அனைத்து மாணவர்களையும் நல்ல முறையில் மதிப்பெண் பெற வைப்பேன், இந்த ஆண்டும் சிலரை மருத்துவ மாணவர்களாக அனுப்புவேன் என்று சொல்லுங்கள் என்று பேசினார். அவரது நம்பிக்கை எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. அதை மாணவர்களிடமும் சொன்னேன். அனைத்து மாணவர்களும் ஆறுதல் அடைந்த நேரத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக