திமுக தலைவர் கலைஞர் அறிக்கை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

திமுக தலைவர் கலைஞர் அறிக்கை

திமுக தலைவர் கலைஞர் அறிக்கை                             📌📌📌📌📌📌📌📌📌📌📌📌துப்புரவுத் தொழிலாளர்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்தல்!*
💥💥💥💥💥💥💥💥💥💥💥
சென்னை உயர் நீதி மன்றத்தில், “மாற்றத்துக்கான இந்தியா” என்ற அமைப்பின் இயக்குனர், திரு. நாராயணன் தாக்கல் செய்த ஒரு மனுவில் “தமிழகத்தில் கழிவு நீர்த் தொட்டிகள், குழாய்களுக்குள் இறங்கி அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் விஷவாயுவால் தாக்கப்பட்டு 200 பேர் இறந்துள்ளார்கள்; அந்தத் தொழிலாளர்களின் குடும்பங் களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கிட தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், விஷ வாயு தாக்கி இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. நீதி மன்ற உத்தரவுகளைத் தான் ஜெயலலிதா அரசு எப்போதும் ஏற்றுக் கொள் வதில்லையே? அதுவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவும் தீர்ப்பு என்றால், கேட்கவா வேண்டும்? அதனால் இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து அதிமுக அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து கொண்டது. உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசின் அந்த மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. 

இந்த நிலையில் தான், இந்த வழக்கு சென்னை உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கவுல், நீதிபதி ஆர் மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, இந்த வழக்கு குறித்து உச்ச நீதி மன்றத்தில் மறு ஆய்வு மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்திருக்கிறது, அந்த மனு விரைவில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது என்று கூறியிருக்கிறார். அப்போது மனுதாரர் நாராயணன், “விஷ வாயு தாக்கி இறந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தமிழக அரசின் கடமை. தமிழக அரசு ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க மறுக்கிறது. 16ஆம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்த நிலை அறிக்கையில் விஷ வாயு தாக்கி இறந்த தொழிலாளர்களில் 41 பேர்களின் முகவரியைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளது. இந்தத் தொழிலாளிகளின் குடும்பத்தினரை போலீசார் மூலம் தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும்” என்றெல்லாம் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் வருவதால், இறந்த துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் பணியை மேற்கொள்ள கால அவகாசம் வேண்டுமென்று அரசுத் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. விஷ வாயு தாக்கி இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தைக் கண்டு பிடித்து இழப்பீடு வழங்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, வழக்கினை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இந்தச் செய்தியை வெளியிட்ட “தினமலர்” நாளேட்டில், “உயிரிழந்த பணியாளர் குடும்பங்கள் : நீதிபதிகள் வேதனை - அரசு கவனம் செலுத்த அறிவுறுத்தல்” என்ற தலைப்பிட்டுள்ள செய்தியில், “மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, உரிய இழப்பீட்டை மறுக்கும் அணுகுமுறை குறித்து மனுதாரர் வேதனை தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினையில் மாநில அரசின் கவனம் நிச்சயம் தேவை என்பதை மட்டும் எங்களால் கூற முடியும். பாதாள சாக்கடை, கழிவு நீர் குழாய்களில் இறங்கி உயிரிழந்த துப்புரவு பணியாளர்களின் குடும்பங்கள் குறித்து, அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றெல்லாம் சென்னை உயர் நீதி மன்றம் வேதனை தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

தி.மு. கழக ஆட்சிக் காலத்தில், துப்புரவுத் தொழிலாளர்களின் மறு வாழ்விற்கான சுய வேலை வாய்ப்புத் திட்டம் ஒன்றே தொடங்கப்பட்டது. துப்புரவுப் பணியாளர்களுக்கு மறு வாழ்வு அளித்திடும் வகையில், சுய வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் கழக ஆட்சியில் 2007-2008ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப் பட்டு, அரசு வங்கிகளின் உதவியுடன் 10,352 துhய்மைப் பணிபுரிவோர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்க்கு 13 கோடியே 14 இலட்சம் ரூபாய் மானியமாகவும், 19 கோடியே 93 இலட்சம் ரூபாய் வங்கிக் கடனாகவும் வழங்கப்பட்டுள்ளது.

அருந்ததியர் சமூக மக்கள் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் மிகவும் பின்தங்கியிருப்பதால் அவர்தம் முன்னேற்றத் திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியம் எனக் கருதி, கழக ஆட்சிக் காலத்தில் 3 சதவிகிதம் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு 2009-2010இல் வழங்கப்பட்டு, அந்த ஆண்டில் மட்டும் அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த 56 மாணவ மாணவியர் மருத்துவக் கல்லுhரிகளிலும், 1165 பேர் பொறியியல் கல்லுhரிகளிலும் வாய்ப்பு பெற்றார்கள். இன்னும் சொல்லப் போனால், நான் திரைக்கதை வசனம் எழுதிய “பெண் சிங்கம்” படத்திற்காகக் கிடைத்த ஊதியம் 50 இலட்சத்தோடு, மேலும் 11 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சொந்தப் பணத்தையும் சேர்த்து, மருத்துவ, பொறியியல் கல்லுhரிகளில் வாய்ப்பு பெற்ற 1221 பேருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டதையும், தற்போது அ.தி.மு.க. அரசு இறந்து போன அருந்ததியர் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண நிதியைக் கூட வழங்காமல் நீதி மன்றங்களில் தொடர்ந்து மேல் முறையீடு செய்து கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதையும் பார்க்கும்போது இதயம் உள்ள எவரும் வேதனையடையாமல் இருக்க முடியாது. 

எனவே அ.தி.மு.க. அரசு சற்றுப் பரிவுணர்வை ஏற்படுத்திக் கொண்டாவது, மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்ற கடை நிலைப் பிரிவினர் விஷயத்தில் நீதி மன்றங்களில் மேல் முறையீடு செய்து கொண்டே காலத்தைக் கழித்து ஏழை எளிய குடும்பங்களை வருத்தாமல், அவர்களுக்கெல்லாம் இந்த நிவாரண நிதி உதவியைச் செய்து அவர்தம் குடும்பங்களுக்கு உதவிட உடனடியாக முன் வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here