ஈஷா யோக மையத்திற்கு எதிராக அவதூறுப் பிரசாரம் மேற்கொள்பவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஈஷா யோக மையம் புகழ்பெற்ற ஆன்மிக மையம் ஆகும். இதற்கு எதிரானவர்கள் ஈஷா மட்டுமின்றி பல்வேறு ஹிந்து ஆன்மிக மையங்க ளுக்கும் எதிராகத் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். ஹிந்து கோயில்களில் நடக்கும் வழிபாட்டு முறைகளை மாற்றவும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பல சேவைகளை மேற்கொண்டு வரும் ஈஷா யோக மையம் போன்ற அமைப்புகளின் செயல்பாடு பாராட்டுக்கு உரியது ஆகும். இந்நிலையில், ஈஷாவில் இரண்டு பெண்கள் ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி, அதன்பின் துறவறம் மேற்கொண்டுள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாமலும், தொன்மையான கலாசாரம், ஆன்மிகம், பண்பாட்டை சிதைக்கவும் சில அமைப்புகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. எனவே, இது போன்ற அமைப்புகளை தமிழக மக்கள் இனம்கண்டு புறக்கணிக்க வேண்டும்.
ஈஷா உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறுப் பிரசாரம் மேற்கொள்பவர்களைக் கண்காணித்து, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக