தலைப்பு செய்திகள் 04/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தலைப்பு செய்திகள் 04/09/2016

       

🔉🔉🔉🔉🔉🔉🔉🔉🔉🔉🔉
www.sivakasiteacherkaruppasamy.com
🔉🔊🔊🔉🔉🔊🔊🔉🔉🔊🔊

🔉பாலியல் புகார்: தாணே சிறை அதிகாரி இடைநீக்கம்

பெண் காவலர் ஒருவரை மானபங்கம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் ஹீராலால் ஜாதவ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.


🔊டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசு மக்களின் உயிருடன் விளையாடி கொண்டு இருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசு மக்களின் உயிருடன் விளையாடி கொண்டு இருக்கிறது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


🔊உடல் எடையை குறையுங்கள்' ராணுவ வீரர்களுக்கு திடீர் உத்தரவு

புதுடில்லி: 'ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள், உடல் எடையை குறைக்க வேண்டும்' என, ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.ராணுவத்தில் உள்ள பல்வேறு பிரிவின் தலைவர்களுக்கு, ராணுவ அமைச்சகம் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உடல் எடை அதிகரிப்பால், வீரர்கள் மற்றும் அதிகாரிகளால் போர் பயிற்சியில் ஈடுபட முடிவதில்லை. உடற்பயிற்சி இல்லாததால், பலவித நோய்கள் ஏற்பட்டு, இறுதியில் அவர்களின் ஆயுள் காலமும் குறைகிறது.சராசரியை விட அதிக உடல் எடை உடைய வீரர்கள் மற்றும் அதிகாரிகள், தகுந்த உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டின் மூலம், தங்கள் எடையை குறைக்க வேண்டும். ஆண்டுதோறும், அவர்களுடைய உடல் எடையில் ஏற்பட்ட மாற்றத்தை அறிய, புகைப்படமெடுத்து, ஆவணத்துடன் இணைக்க வேண்டும்.உடல் தகுதி பெறும்வரை, சிறப்பு பணிகளில் அவர்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள்.

சராசரி உடல் எடையை விட, 10 சதவீதத்திற்கும் மேல் அதிகம் இருந்தால், பல்வேறு பிரிவுகளில் பணி அனுபவம் இருந்தாலும், அவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ராணுவ தளபதி தல்பீர் சிங்கின் தனிப்பட்ட முயற்சியில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; வீரர்கள் சுறுசுறுப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதை விரும்பும் அவர், தினமும், 10 கி.மீ., துாரம் ஓடுவதாக ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர்.


🔉பாதுகாப்பு: வியத்நாமுக்கு இந்தியா ரூ.3,340 கோடி கடனுதவி

வியத்நாமுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில், அந்த நாட்டின் பாதுகாப்புச் செலவுகளுக்காக 50 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,340 கோடி) கடனுதவி அளிக்க இந்தியா முன்வந்துள்ளது


🔉சேலம் அரசு மருத்துவமனையில் மேற்கூரை சரிந்து விழுந்ததால் பரபரப்பு

சேலம் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்ததால், நோயாளிகள் உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.


🔊தேசிய தகவல் தொழில்நுட்ப விருது: தமிழக ஆசிரியர்கள் இருவர் தேர்வு

மத்திய அரசின் 2015-ஆம் ஆண்டுக்கான "தேசியத் தகவல் தொழில்நுட்ப விருது' (ஐசிடி) பெற தமிழக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் கல்வி கற்கும் திறனை அதிகரிக்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் "தேசிய தகவல் தொழில்நுட்ப விருது' மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி 2015-ஆம் ஆண்டுக்கான விருதை தமிழகத்தின் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எஸ்.தர்மராஜ் (அரசு ஊராட்சித் தொடக்கப் பள்ளி, கோத்தகிரி, நீலகிரி), எம்.விஜயகுமார் (அரசு மேல்நிலைப் பள்ளி, சோமந்தர்குடி, விழுப்புரம்) ஆகிய இருவரும் பெறவுள்ளனர்


🔊பாலாறு அணை விவகாரம்: ஆந்திரம் அனுமதி கோரவில்லை

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிப்பது குறித்து மத்திய நீர் ஆணையம் ஆய்வு நடத்த அனுமதி கேட்டு ஆந்திர அரசு விண்ணப்பிக்கவில்லை என்று மத்திய நீர் வளத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.


🔉அண்ணனைக் கொலை செய்த தம்பி கைது

ஆத்தூர் அருகே மதுபோதையில் அண்ணனைக் கொலை செய்த தம்பியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் (23), ரஞ்சித்குமார் (20). சகோதரர்களான இருவரும் வெள்ளிக்கிழமை மாலை மது அருந்திய போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ரஞ்சித்குமார் தனது அண்ணன் ராஜ்குமாரைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு, தூங்கச் சென்றுவிட்டாராம். சனிக்கிழமை காலை எழுந்து பார்த்தபோது ராஜ்குமார் தலையில் அடிபட்ட நிலையில், உயிரிழந்து கிடந்துள்ளார்.

ஏத்தாப்பூர் போலீஸார், ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.


🔉ரயில்வே துறையை நவீனப்படுத்த தனியார் பங்களிப்பு அவசியம்: அமைச்சர் சுரேஷ் பிரபு

ரயில்வே துறையை நவீனப்படுத்த தனியார் துறையின் பங்களிப்பு அவசியம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு தெரிவித்தார்.


🔊சமயபுரம் அருகே வழக்குரைஞர் கொலை வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது

திருச்சி சமயபுரம் அருகே வழக்குரைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 மாதங்களுக்குப் பிறகு ரியல் எஸ்டேட் அதிபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.


🔊நாமக்கல்லில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் சார்பில், குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு கோட்டம் முன் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.


🔉இரு கொலைகள் செய்ததாகக் கூறி இளைஞர் தற்கொலை முயற்சி

இரு கொலைகள் செய்ததால் மனஅழுத்தம் ஏற்பட்டதாகக் கூறி, திருப்பூரில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு இளைஞர் ஒருவர் முயன்றார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் எம்.கஜேந்திரன் (31). இவர், கடந்த சில மாதங்களாக திருப்பூர்- காந்தி நகர், ஏவிபி லேஅவுட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அனுப்பர்பாளையம் மும்மூர்த்தி நகரில் கழுத்து அறுபட்ட நிலையில் கஜேந்திரன் சனிக்கிழமை கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீஸார் அவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக அனுப்பர்பாளையம் போலீஸார் அவர் மீது தற்கொலைக்கு முயற்சித்தாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்


🔉பழிவாங்கும் குணம் மோடியின் மரபணுவில் கலந்துள்ளது: காங்கிரஸ் தாக்கு

அரசியல் பழிவாங்கும் குணம் பிரதமர் மோடியின் மரபணுவிலேயே கலந்திருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஆனந்த் சர்மா குற்றம்சாட்டினார்.



🔊கொலை மிரட்டல் விடுத்ததாக நகரமைப்பு ஆய்வாளர் உள்பட 5 பேர் கைது

நகராட்சி இளநிலை உதவியாளரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக நகரமைப்பு ஆய்வாளர் உள்பட 5 பேரைக் காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.


🔊இரட்டைக் கொலை வழக்கில் 4 பேரின் ஆயுள் தண்டனை உறுதி

இரட்டைக் கொலை வழக்கில், 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

திருவள்ளூர் மாவட்டம், திருவூர் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-இல் அவமரியாதை செய்யப்பட்டதைக் கண்டித்து, பதற்றம் உருவானது. அப்போது, வயலில் பணிபுரிந்த விவசாயிகள் சுகுமார், மகேஷ் ஆகிய இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான 28 பேர் மீது செவ்வாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து திருவள்ளூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட கண்ணன் உயிரிழந்தார். மீதமுள்ள 27 பேருக்கும் ஆயுள் தண்டனையை 2015 டிசம்பர் 21-இல் நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, நீதிபதி வி.பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:-

ராஜ் என்கிற ஆட்டோ ராஜ், ஐயப்பன் என்கிற பால்ராஜ், ரஜினி என்கிற பார்த்திபன், பாலு என்கிற பாலமகேந்திரன் ஆகிய 4 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இவர்களின் ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. இவர்களைக் கைது செய்து, சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநேரத்தில், குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களை சாட்சிகளால் அடையாளம் காட்டுவது என்பது சாத்தியமில்லாதது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதால், 23 பேரை விடுதலை செய்யப்படுகின்றனர் என்றார்


🔉என்.எல்.சி.யில் சி.ஐ.டி.யு.க்கு அங்கீகாரம்: மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (என்.எல்.சி.) சி.ஐ.டி.யு.க்கு அங்கீகாரம் அளிக்கக் கோரி, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கடிதம் எழுதியுள்ளார்.



🔉மீனவர் பிரச்னையில் நல்ல தீர்வு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக மீனவர் பிரச்னையில் நல்ல தீர்வு ஏற்படுத்த மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.


🔊ரூ.249க்கு 'பிராட்பேண்ட்' சேவை:பி.எஸ்.என்.எல்., அதிரடி அறிவிப்பு

புதுடில்லி:பொது துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க, புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவத்சவா கூறியதாவது:செப்., 9 முதல், 'எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் பி.பி. 249' என்ற பிராட்பேண்ட் சேவை அறிமுகமாகிறது. இந்த கேபிள் வழியிலான, தடையில்லா இணைய சேவைக்கு, சந்தாதாரர்கள், 249 ரூபாய் செலுத்தி, மாதம், 300 ஜி.பி., வரை தகவல்களை பதிவிறக்கலாம். அதாவது, 1 ஜி.பி., தகவலை பதிவிறக்க, 1 ரூபாய் மட்டுமே செலவாகும். 2 ஜி.பி., டேட்டா வேகத்தில், இவ்வளவு குறைந்த கட்டணத்தில், நாட்டிலேயே பி.எஸ்.என்.எல்., மட்டுமே இத்தகைய சேவையை வழங்க உள்ளது.


🔊மிளகாய்ப் பொடி குண்டுகள்: ராஜ்நாத் சிங் ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு பெல்லட் ரக தோட்டாக்களுக்குப் பதிலாக மிளகாய்ப் பொடி குண்டுகளை பயன்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.


🔉மணல் விலை அதிரடி ஏற்றம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அழியாநிலை மணல் குவாரியில் திங்கள் முதல் அதிரடியாக விலை ஏற்றப்பட்டுள்ளது.

அரசாங்கம் 3 யூனிட் மணலை 900 ரூபாய்க்கு விற்க சொன்னது. ஆனால் ஒரு பொக்கலின் பக்கெட் மணல் ரூ.600 என்று விற்றவர்கள் செப்டம்பர் 5 ந் தேதி திங்கள் கிழமை முதல் ரூ. 100 விலை ஏற்றி பக்கெட் ரூ. 700 க்கு விற்க முடிவெடுத்து பெயர் பலகையும் வைத்துள்ளார்களாம்.

இதுவரை கண்டுகொள்ளாத புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் கவணிக்குமா என்கிறார்கள் மணல் லாரி ஓட்டுநர்கள். மேலும் அறந்தாங்கி மணல் வாங்கி வீடுகட்டும் பொதுமக்களுக்கு ஒரு லாரி மணலுக்கு ரூ.

1000 கூடுதல் செலவாகும் என்றவர்கள் திங்கள் கிழமை அன்று லாரிகளை நிறுத்தி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் கண்டு கொள்வார்களா? நடவடிக்கை எடுப்பார்களா?


🔉சமோசாவுக்கு ரூ.1 கோடி செலவு செய்யும் ஆம் ஆத்மி அமைச்சர்கள்

புது டில்லி:டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கேபினட் அமைச்சர்கள் 6 பேர், சமோசா, தேநீருக்காக கடந்த 18 மாதங்களில் மட்டும் ரூ.1 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது



🔊சிறுவாணி விவகாரம்: தமிழிசை பேட்டி

சென்னை:சிறுவாணி அணை விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் பாதிக்காதவாறு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த பா.ஜ.க., தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார்.



🔊கோவாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டுக்கு பிரதமர் மோடி அழைப்பு

ஹங்சோ: ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று சீன அதிபருடன் இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேசிய பிரதமர் மோடி இந்த வருடம் இந்தியாவின் கோவாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டுக்கு அனைவரையும் வரவேற்பதாகக் கூறினார்.


🔉விஜய் மல்லையாவின் 6,630 கோடி சொத்துகள் முடக்கம்

பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

கடன் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனுக்கு விஜய் மல்லையா செவி சாய்க்கவில்லை.

எனவே அவரது சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக் கையில் அமலாக்க பிரிவினர் தொடங்கினர்.

இதற்காக விஜய் மல்லையா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான உறுதி செய்யப்பட்ட பங்குகள், அதனுடன் தொடர்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துகள் அடையாளம் காணப்பட்டு ரூ.6,630 கோடி மதிப்புள்ள சொத்துகளை நேற்று அமலாக்க பிரிவு அதிரடியாக முடக்கி உத்தரவிட்டது.

மராட்டியத்தில் உள்ள ரூ.200 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு, பெங்களூருவில் உள்ள ரூ.800 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு, மால் மற்றும் ரூ.3,000 கோடி மதிப்புள்ள பங்குகள் உள்ளிட்டவை முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்க பிரிவு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


🔉அருணாசல பிரதேச ஆளுநர் ராஜ்கோவா பதவி விலக மத்திய அரசு உத்தரவு

டெல்லி: அருணாசல பிரதேச ஆளுநர் ராஜ்கோவாவை பதவி விலக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



🔊நர்ஸ்கள் ஸ்டிரைக் திடீர் வாபஸ்

புதுடில்லி : சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய அரசு நர்சுகள் கூட்டமைப்பு மற்றும் டில்லி நர்சுகள் கூட்டமைப்பு நடத்திவந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


🔊காஷ்மீர் சுடுகாடாகும் : பயங்கரவாதி பகிரங்க மிரட்டல்

முஷபராபாத் : காஷ்மீரின் தேடப்படும் குற்றவாளியும், காஷ்மீர் பதற்றம் தணியாமல் இருப்பதன் பின்னணியில் இருப்பவனுமாக கருதப்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவன் சையது சலாலுதீன், இந்திய படைகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளான்.அவன் தனது பேச்சில், காஷ்மீர் முழுவதும் அதிக அளவில் பயிற்சி பெற்ற தற்கொலைப் படைகளால் நிரப்புவோம். காஷ்மீர் இந்திய படைகளின் சுடுகாடாக மாறும். பாகிஸ்தான் எங்கள் அமைப்பிற்கு ஆதரவு அளிக்கிறது. காஷ்மீரில் அமைதியும், வழக்கமான சூழலும் திரும்ப வாய்ப்பே இல்லை என காஷ்மீர் தலைமை, மக்கள், முஜாஹிதீன் அமைப்பினர் என அனைவருக்கும் தெரியும். ஆயுத போர் தவிர வேறு வழியே இல்லை.இந்த போராட்டம் காஷ்மீருடன் நின்று விடாது.

ஒட்டுமொத்த நாடு முழுவதும் பரவும். ஆந்திரா, தமிழகம், அசாம், நாகாலாந்து, அரியானா, பீகார், டில்லியில் உள்ள எங்களின் வீரர்கள் தேவைப்பட்டால் தற்கொலைப் படையாக மாறி தாக்குதலில் ஈடுபடுவார்கள் என அவன் தெரிவித்துள்ளான்.

🔉செப்.,8 விண்ணில் பாய்கிறது இன்சாட் 3டிஆர்

சென்னை: இஸ்ரோ தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக 2,211 கிலோ எடை கொண்ட 'இன்சாட்-3டிஆர்' என்ற செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோள் ஜி.எஸ்.எல்.வி எப்5 ராக்கெட் மூலம் செப்டம்பர் 8 ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. 

🔉பள்ளி தேர்வுகள் ஆதார் திட்டத்துடன் இணைப்பு

பாட்னா : பீகாரில் மாநில தேர்வில் நடந்த முறைகேட்டை அடுத்து, தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் ஆதார் எண்களை தேர்வுக்கான படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறையை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. 


🔊எழும்பூர்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியில் இருந்து வாஸ்கோடகாமாவுக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

எழும்பூர்-வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரெயில் எழும்பூரில் இருந்து (வ.எண்.06013) 6-ந் தேதி (நாளை மறுதினம்) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். இதேபோல 'சுவிதா' சிறப்பு ரெயில் (வ.எண்.82656) வேளாங்கண்ணியில் இருந்து 8-ந் தேதி காலை 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது''என்று கூறப்பட்டுள்ளது.

🔊நளினியை சந்திக்க மறுத்த முருகன்

முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இதே வழக்கில் முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கோர்ட்டு உத்தரவுபடி முருகன் தனது மனைவி நளினியை 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகிறார். அதன்படி முருகன், நளினியை இன்று சந்திக்க வேண்டும். ஆனால் நளினியை சந்தித்து பேச முருகன் விருப்பம் தெரிவிக்கவில்லை.

15 நாட்களுக்கு ஒருமுறை மனைவி நளினியை சந்திக்க வேண்டுமெனில் ஜெயில் அதிகாரிகளிடம் முருகன் விருப்ப மனு அளிப்பார்.

ஆனால் இந்த முறை நளினியை சந்திக்க அவர் மனு அளிக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.



🔉தெற்கு பிலிப்பைன்ஸ் தீவு அருகே நிலநடுக்கம்

தெற்கு பிலிப்பைன்ஸ் தீவு அருகே மின்டானோவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



🔉ஆசிரியையை ஆபாச படம் எடுத்து மிரட்டிய ஆசிரியர் சிறையிலடைப்பு

திருப்பூர் பாப்பநாயக்கன் பாளையத்தில் வசிப்பவர் நாகஜோதி. அரசு பள்ளி ஆசிரியை. இவர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில், நான் மதுரை மாவட்டம் டி. கள்ளிப்பட்டியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தேன். எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதே பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் காளீஸ்வரன். அவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் எனக்கும், காளீஸ்வரனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அதுவே கள்ளக்காதலாக மாறியது. குடும்பத்தை விட்டு பிரிந்து இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தோம்.

அதன்படி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இருந்து திருப்பூருக்கு இடம்மாறி வந்தோம். இங்கு வந்த நாங்கள் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவிபோல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தோம். காளீஸ்வரன் திருப்பூர் ராயபுரத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக உள்ளார். நான் வேறு பள்ளியில் வேலை செய்து வருகிறேன்.

இந்நிலையில் ஆசிரியர் காளீஸ்வரனின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அது குறித்து நான் கண்காணிக்க ஆரம்பித்தேன். அப்போது காளீஸ்வரனுக்கு இன்னொரு ஆசிரியையுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த நான் இது குறித்து காளீஸ்வரனிடம் தட்டிக்கேட்டேன்.

என்னை எதுவும் கேட்க கூடாது என்றும் நாம் உல்லாசமாக இருந்த போது செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளேன். ஏதாவது மிரட்டினால் என்றால் இணைய தளத்தில் ஆபாச படங்களை வெளியிட்டு விடுவேன் என்று படத்தை காண்பித்து என்னை மிரட்டுகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்''என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி ஆசிரியர் காளீஸ்வரனை கைது செய்தார். 


🔊அரியலூர்-அரியலூர் ரயில்வேயில் கீ மேனாக  ரயில்வே தொழிலாளர்களின்  SRES சங்க கூடுதல் செயலாளர் செல்வகுமாரை கடந்த மாதம் அரியலூரில் கொலை செய்ய முயன்ற வழக்கில் திருச்சி பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டாரும் SRMU வின் கூடுதல் செயலாளருமான வெங்கடநாதன் மற்றும் கூலி படையினர் 5 பேர் கைது.விருதாச்சலம் ரயில்  போலீஸார் குற்றவாளிகளை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்.



🔊பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு: இருதரப்பு பேச்சுவார்த்தை

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். ஜ20 மாநாட்டுக்கு முன்பாக இருவரும் இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்



🔉அன்னை தெரசாவுக்கு இன்று புனிதர் பட்டம்

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா இன்று வாடிகன் நகரில் கோலாகலமாக நடக்க உள்ளது. இவ்விழாவில் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பேராயர்கள் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்தியா சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு இவ்விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வாடிகன் நகரில் குவிந்துள்ளனர். இதனால் ரோம் முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

www.sivakasiteacherkaruppasamy.com

🔉🔊🔊🔉🔉🔊🔊🔉🔉🔊🔊

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here