நீதிபதிகள் நியமனங்களில் நீதி இல்லை ........உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் குற்றச்சாட்டு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நீதிபதிகள் நியமனங்களில் நீதி இல்லை ........உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் குற்றச்சாட்டு


“நீதிபதிகள் நியமனம் எப்படி நடக்கிறது என்பது வெளி உலகத்துக்குப் புரிவதில்லை; நீதித் துறையில் இருப்பவர்களுக்கும் அதுபற்றி அதிகமாகத் தெரிவதில்லை; யாரோ இரண்டு பேர் விருப்பத்துக்கு ஏற்ப, நீதிபதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்!”. நீதித்துறையின் நடைமுறைக்கு, எதிரான இந்தக் கருத்து, நீதித்துறைக்கு வெளியில் இருந்து அடிக்கடி எழும்பும்; அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலரிடம் இருந்து அவ்வப்போது ஒலிக்கும். அதனால், அவை வீரியம் குறைந்த இயலாமையின் வெளிப்பாடாக பார்க்கப்படும். நீதித்துறை அவற்றை அலட்சியப்படுத்தி, சலனமின்றிக் கடந்துவிடும். ஆனால், இந்த முறை அப்படிக் கடக்கமுடியாது. ஏனென்றால், மேலே நாம் குறிப்பிட்டு இருக்கும் கருத்தைச் சொல்லி இருப்பவர், உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியில் இருக்கும் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர்.

உச்ச நீதிமன்றத்  தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக 5-வது இடத்தில் இருப்பவர். அதைவிட முக்கியம்,  நீதிபதிகளைச் தேர்வு செய்யும் ‘கொலிஜியம்’ அமைப்பிலும் நீதிபதி செல்லமேஸ்வர் ஒரு உறுப்பினர் என்பது. இதுபோன்ற காரணங்கள், நீதிபதி செல்லமேஸ்வரின் கருத்துகளை ஓங்கி ஒலிக்கச் செய்கின்றன. அது  இந்திய நீதித்துறையில், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால், நீதித்துறை இதை எளிமையாகக் கடந்துவிட முடியாது. 
இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூருக்கு, நீதிபதி செல்லமேஸ்வர் எழுதிய கடிதத்தில், நீதிபதிகளைத் தேர்வு செய்யும், ‘கொலிஜியம்’ அமைப்பை கடுமையாக விமர்சனம் செய்ததுடன், இனிமேல் அந்தக் குழுவின் எந்தக் கூட்டத்திலும் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய கடிதத்தில், “நீதிபதிகளைத் தேர்வு செய்யும், ‘கொலிஜியம்’ வெளிப்படையாக இல்லை. தேர்வு செய்யும் முறையில், விவாதம் இல்லை; கருத்துக்கள் காது கொடுத்துக் கேட்கப்படுவதில்லை; தேர்வு முறை என்ன அடிப்படையில் நடந்தது என்பது, ஆவணமாகப் பதிவு செய்யப்படுவதும் இல்லை. 
நீதிபதி பணிக்கு தேர்வு செய்யப்படும் ஒரு நபர், அதற்கு தகுதியற்றவர்; தவறானவர் என்று ஆதாரப்பூர்வமாக ‘கொலிஜிய’த்தில் இருக்கும் ஒரு உறுப்பினர், நிருபித்தாலும் அது ஏற்கப்படுவதில்லை. மாறாக, தவறான அந்த நபரை அதிகமானோர் ஆதரித்தால் போதும். அவர் நீதிபதியாகலாம் என்கிறது கொலிஜியத்தின் நடைமுறை.  தவறான ஒருவர், அதிகம் பேர் ஆதரித்தால், பரிசுத்தமாகி அவர் சரியான நபராக மாறிவிடுவாரா? இங்கு ஆதாரங்களையும் ஆவணங்களையும் கவனத்தில் கொள்வதுதானே சரியான நடைமுறையாக இருக்கும். அதைவிடுத்து, மெஜாரிட்டியைப் பார்ப்பது எப்படி நேர்மையான நடைமுறையாக இருக்கும்? 

 
என்னுடைய அனுபவத்தில், இந்த அநீதியான நடைமுறையைத்தான் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாரோ ஒன்றிரண்டு பேர்,  நீதிபதிகளாக யார் வர வேண்டும் என்பதை முடிவு செய்துவிடுகிறார்கள். அவர்கள் தேர்வு செய்து அனுப்பும் நபரை, ஆம்... இல்லை... என்ற கேள்விக்கு பதில் சொல்வதன் மூலம் நாமும் ஆதரித்து, நீதிபதியாக்க வேண்டும். அவர் சரியான நபரா? தவறான நபரா? என்பது பற்றிய எந்த விவாதமும் கிடையாது. தேர்வு செய்யும் முறை ஆவணப்படுத்தப்படுவதும் இல்லை. இதுபோன்ற ரகசிய நடைமுறையால், இந்த தேசத்திற்கு கடுகளவு நன்மையாவது செய்ய முடியுமா? நான் இந்தக் கேள்விகளை, எந்த ஒரு தனிநபரையும் மனதில் வைத்து எழுப்பவில்லை. மாறாக, இந்தத் தேர்வு முறையில் இருக்கும், நேர்மையற்ற தன்மையைச் சுட்டிக் காட்டி உள்ளேன். என்னுடைய இந்தக் கேள்விகளாவது, இந்த நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார். 
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், “நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு மெத்தனம்காட்டினால், நீதிமன்றமே அந்த வேலையில் இறங்கக்கூடும்” என்று கருத்துத் தெரிவித்திருந்தார். அந்த நிலையில், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக எழுப்பி இருக்கும் இந்தக் கேள்விகள் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here