கீழடி தொல்லியல் தடயம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கீழடி தொல்லியல் தடயம்

மதுரை என்னும் சொல் கூட வரலாற்றுத் தொன்மங்களைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மதுரையின் நிலப்பரப்பெங்கும் தொல்லியல் தடயங்களைப் புதைத்து வைத்திருக்கும் பெருங்களமாய் விரிந்து கிடக்கிறது. பண்பாட்டுப் பழமையும், செழுமையான வாழ்வியல் வரலாறும், மொழி உயிர்ப்பும் இன்னும் வலுவுடன் திகழும் தொல் நிலமாய் மதுரை மண் பரந்து கிடக்கிறது.

மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் புதிய வரலாற்றுத் தடயங்களை வெளிக் கொணர்ந்துள்ளன. அவ்வகையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கீழடி எனும் சிற்றூரில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் தடயங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்ட எல்கை, மதுரை நகரிலிருந்து அண்மைத் தொலைவிலிருக்கும் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் 6 ஆம் அகழாய்வுப் பிரிவினர் முதல் கட்ட அகழாய் வைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகையத் தொல் நிலத்து அடையாளப் பதிவுகளைக் கண்ணுறும் நோக்கில் மக்கள் தமிழ் ஆய்வரண் சார்பாகப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆசிரியத் திருவாளர்கள் அன்பு தவமணி, முத்துக்கிருசுணன், இரவிச்சந்திரன் ஆகியோருடன் நானும் கடந்த 25.6.2016 இல் பெருங் களம் நோக்கிப் பயணமானோம்.

மதுரையை அடுத்த சிலைமான், அதையடுத்த பசியாபுரம் சிற்றூர்களைத் தாண்டியே கீழடி எனும் சிற்றூர். இவ்வூரின் பள்ளிவாசலுக்கு எதிரே போகும் வண்டிப் பாதை பரந்திருக்கும் தென்னந்தோப்புக்குள் நுழைகிறது. வண்டிப் பாதையின் தடம் மட்டுமல்லாமல் தோப்பின் வாய்க்கால் வரப்புகள் புழுதிகள் யாவற்றிலுமே கூட பழங்காலப் பானையோடு சில்லுகள் தான் முகம் காட்டிக் கிடந்தன.

பசியாபுரம், கீழடி, கொந்தகை, பாட்டம் போன்ற சிற்றூர்களைச் சேர்ந்த 110 பேருக்குச் சொந்தமான 81 ஏக்கர் நிலப்பரப்பில் வைகையின் ஆற்றுப்படுகையில் தான் அத் தென்னந்தோப்பு அமைந்திருக்கிறது. தோப்பில் உள்ள மரங்களே நூறாண்டுக்கும் மேலான பழமையைச் சொல்லியபடி அசைந்து கொண்டிருகின்றன.
தோப்பில் உள்ள எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல் ஆங்காங்கே சதுரக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தோண்டப்பட்ட எல்லாச் சதுரக் குழிகளிலும் பல்வேறு வகையிலான தொல்லியல் தடயங்கள் புதைந்திருப்பது வெளித் தெரிகின்றன.

சாம்பல் நிறத்திலான மண்ணுக்கடியில் பெருநகரமே புதைந்திருப்பதற்கான தடயங்கள் வெளிப்பட்டுள்ளன. சுடுமண் கிணற்று உறைகள், குழாய்கள், வடிகால்கள், வாய்க்கால்கள், மூடிய நிலையிலான சாக்கடை வழிப்பாதைகள், குளியலறை, கழிவுக் குழிகள், சிற்றறைகள், தாழிகள், மண்பாண்டங்கள், இரும்பு உலைக் குழிகள், அணிமணிகள், காசுகள், கருவிகள் எனப் புதையுண்டிருந்த பழங்காலத் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தடயங்கள் அகழாய்வில் வெளிக் கொணரப்பட்டுள்ளன. பண்பட்ட வாழ்வும் வரலாறும் வாழ்நிலமும் மண்ணில் புதைந்து கிடப்பதைக் காணுகையில் பெரு வியப்பும் பெருமிதமும் பெருஞ்சோகமும் ஒன்று கூடிக் கவ்விக் கொண்டன.

வைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாட்டு மலையிலிருந்து முடிவுறும் இராம நாதபுரம் வரையிலும் ஆற்றின் இருபுறங்களிலும் 280க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றுள், பழங்கால வாழிடத் தொல்லியல் நிலப்பரப்பாகக் கீழடி அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இப்போதைய நகர வளர்ச்சியின் நாகரிக அடையாளங்கள் எனச் சொல்லப்படுகின்றவை எல்லாம், கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தடயங்களில் செழித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. மேலும், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. அவற்றுள், மடைச்சி என்னும் பெயர் தமிழி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட மண் கலயமும் ஒன்றாகும். இப்பெயர் வேளாண் குடிகளோடு தொடர்புடையது. பழங்காலம் முதற்கொண்டு இக்காலம் வரையிலும் நீர் மேலாண்மை செய்து வருகின்ற வேளாண் குடிகள் மடைச்சி, மடையர், மடையளவக்கார், மடை வேலைக்காரர் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். மேலும், அகழாய்வு நடைபெற்று வரும் நிலப்பகுதியை அவ்வட்டாரப் பெரியவர்கள் பள்ளுச் சந்தைத் திடல் என்றே அழைக்கின்றனர். பள்ளு என்பதும் வேளாண் குடிகளைக் குறிக்கும் சொல்லாகவே அமைந்திருக்கிறது . அகழாய்வில் புதைபொருட்கள் நிறையக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே, அவ்வட்டாரப் பெரியவர்களிடமும் வாய்மொழி வழக்காற்றுத் தரவுகள் நிரம்பிக் கிடக்கின்றன.

பள்ளுச் சந்தைத் திடல் இருக்கும் இப்பகுதியில் மிகப் பழமையான ஊர் ஒன்று இருந்ததாகவும், பழங்காலமாக மக்கள் வாழ்ந்து வந்த போது பகாசுரன் என்பவரின் இடையூறுகள் இருந்ததினால் குந்திதேவியின் வழிகாட்டல் படி பக்கத்து ஊருக்குப் புலம் பெயர்ந்து குடியேறியதாகவும், குந்தவை தேவியின் நினைவாகவே அவ்வூர் அழைக்கப்பட்டு இப்போது கொந்தகை என மருவி அழைக்கப்படுவதாகவும், கொந்தகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏகத்துக்கும் தாழிப் பானைகள் புதைந்து கிடப்பதாகவும் வாய்மொழித் தரவை வழங்கினார் அப்பகுதிப் பெரியவர் திரு ஆண்டி அவர்கள்.

அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்லியல் தரவுகளின்படி, முற்காலப் பாண்டியர்களின் தலைநகரான மணலூர் எனும் நகரமே கீழடியில் புதைந்திருப்பதாகக் கருத முடிகிறது. ஊர் என்பது மருத நிலத்துப் பேரூரைக் குறிக்கும் சொல்லாகும். மணலூரும் மருத நிலத்துப் பேரூராய் இருந்திருக்க வாய்ப்புண்டு. கீழடியைச் சுற்றியுள்ள பசியாபுரம், கொந்தகை, பாட்டம், விரகனூர், சிலைமான், அய்ராவதநல்லூர் போன்ற ஊர்களுக்கும் கீழடிக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பிருக்க அதிகம் வாய்ப்புண்டு. கீழடியைச் சுற்றியுள்ள பகுதி வேளாண் குடிகளிடம் இன்னும் நிலவிக் கொண்டிருக்கிற வாய்மொழி வழக்காறுகள், வழிபாட்டு மற்றும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள், பண்பாட்டு வெளிப்பாடுகள், தொன்ம அடையாளங்கள் போன்றவற்றையும் கீழடி அகழாய்வுகளோடு ஒப்பு நோக்கியும் இணைவித்தும் பார்க்கும் போது தான் வரலாறு முழுமை பெறுவதற்கு வாய்ப்புண்டு. இத்ததைய வரலாற்று மீட்டுருவாக்கப் பணியில் தொல்லியல் துறையினருக்கு மட்டும் பங்கில்லை. நம் அனைவரின் சமூகக் கடமையும் கூட.

கீழடி போன்றே வெகு காலத்திற்கு முன்பாக ஆதிச்சநல்லூரிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. புதிய தடயங்கள் நிறைந்த அந்நிலத்து அகழாய்வு அறிக்கை இன்னும் வெளியிடப்படவேயில்லை. கீழடி அகழாய்வு அறிக்கையும் அது போல் முடங்கிப் போகவும் கூடாது. கீழடியில் அகழாய்வு செய்து கொணரும் முதன்மையான பொருட்கள் யாவற்றையும் தமிழ்நாட்டின் தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில் வைத்திருக்கும் போது தான் சிதையாமலும் திருடப்படாமலும் திருத்தப்படாமலும் இருப்பதற்கு ஓரளவு உறுதி சொல்ல முடியும்.
அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வரலாற்றைப் பாதுகாப்பதும், மீட்டமைப்பதும், நேர் செய்வதும் நம் எல்லோரின் கடமை.

ஒரு காலம்
ஒரு வாழ்க்கை
ஓர் இனம்
ஒரு நிலத்துக்குக்
கீழே
அடியிலே
புதைந்து இருப்பதனால் தான் கீழடி என்னும் பெயர் அந்நிலத்திற்கு வழங்கி இருக்கலாம்.

கீழடி என்னும் ஊர்ப்பெயர்ச் சொல்தான் அதன் வரலாற்றுத் தடயம் வெளித்தெரியக் காரணமாய் இருந்திருக்க வேண்டும். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே தான்.

கீழடி அகழாய்வுக் களத்தில் தொல்லியல் சான்றுகள் குறித்து விளக்கப்படுத்திய அகழாய்வு உதவித் தகைமையர் திரு வசந்த் அவர்களுக்கு நன்றி.

ஏர் மகாராசன், மக்கள் தமிழ் ஆய்வரண் ஒருங்கிணைப்பாளர். வேளாண் தொழிலர். சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர். கல்வியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here