தலித் இலக்கியத்திலும் சினிமாவிலும் பிராமணர்கள் மீதான பெரும்பாலும்
விமர்சனமே இராது. தலித்திய ஆய்வுகள் உருப்பெறும் காலத்தில் இருந்து அதற்கு பிராமணர்கள் குறிப்பிடத்தக்க ஆதரவு அளித்திருக்கிறார்கள். இன்றும் தலித்தியம் பற்றி பேசும் போதும் பிராமணர்களின் கண்கள் சுடர்வதை கண்டிருக்கிறேன். அதே போல பிராமணர்கள் என்ன தான் தம் சாதியத்தை இறுக்க பற்றியிருந்தாலும், அதை வெளிப்படையாய் பறைசாற்றினாலும் அவர்களுடன் இணக்கமாய் செயல்படுவதில் தலித்துகளுக்கு சிக்கலே இருந்ததும் இல்லை, இருப்பதும் இல்லை. அரசியலிலும் இதே நிலை தான். உத்தர பிரதேசத்தில் பிராமணர்களுடன் மாயாவதி ஏற்படுத்திய வெற்றிக் கூட்டணி பற்றி நமக்குத் தெரியும். அதை விட முக்கியமான தகவல் இன்று பா.ஜ.க அடைந்து வரும் பெரும் வளர்ச்சியில் தலித்துகள் ஆற்றியுள்ள பங்கு. வடமாநிலங்களில் தலித்துகள் தம்மை சமூக அளவில் உயர்த்திக் கொள்ள இந்துத்துவத்தை பரவலாக அங்கீகரிக்கிறார்கள். அதில் ஐக்கியமாகிறார்கள். இதை பா.ஜ.கவின் பிராமணிய மையம் ஊக்குவிக்கிறது.
சமீபத்தில் வெளியான ரஞ்சித்தின் கபாலிக்கு எனது பிராமண நண்பர்கள் பலர் அளித்த ஒருமித்த ஆதரவு கண்ட போது எனக்கு இந்த கோணம் மீண்டும் நினைவு வந்தது.பிராமணர்களில் கணிசமானோர் சாதியத்தை கலாச்சார ரீதியாகவும் தம் வாழ்வியலிலும் ஏற்கிறார்கள். சாதியத்தில் பங்கேற்கிற எவரும் அதன் ஏற்றத்தாழ்வுகளுக்கு மறைமுகமாய் ஆதரவளிக்கிறார்கள். ஆனால் பிராமணர்கள் தலித்துகளுக்கு எதிர்நிலையில் வராததற்கு நிலம் ஒரு காரணம்.தொண்ணூறுகளுக்கு பிறகு தலித்திய கட்சிகள் எழுச்சி பெற, தலித்திய சிந்தனைகள் மேலெழ அவை மத்திய சாதிகளை எதிர்கொள்வதற்கான ஒரு சிறந்த கேடயமாக பிராமணர்களுக்கு மாறின.
ஒட்டுமொத்த சமூகக் கோபத்தையும் திசை திருப்பவும் பலவாறாய் பிரித்து அனுப்பவும் தலித்தியம் அவர்களுக்கு பயன்பட்டது. “பராசக்தி” துவங்கி “காதல்” வரையிலான தமிழ் சினிமாவின் பயணத்தை எண்ணிப் பார்த்தால் இது துல்லியமாய் விளங்கும்.
“பராசக்தியில்” சமூக ஏற்றத்தாழ்வுக்கு பிராமணர்கள் நேரடியாய் குற்றம் சாட்டப்படுகிறார்கள். ஆனால் “காதலில்” மிகக் கொடூரமான சாதிய வன்முறையும் ஏற்றத்தாழ்வுகளும் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் பிராமணர்களின் தடயமே அதில் இருப்பதில்லை.
அன்றாட வாழ்வில் தலித்துகள் தொடர்ந்து எதிர்கொள்ள நேர்வதே மத்திய சாதியினரை தான். அவர்களின் அவமானங்கள், ஒடுக்குமுறைகளின் ஏஜெண்டுகளாக மத்திய சாதியினர் இருக்கிறார்கள். இதற்கு நிலம் முக்கிய காரணம். எந்த கிராமத்திலும் சாதி ரீதியாய் தலித்துகள் பிரித்து வைக்கப்படுகிறார்கள். நிலம் சார்ந்த உழைப்பு அவர்களை மேலும் மேலும் சாதியத்தில் பிணைக்கிறது. நகரத்துக்கு சென்று படித்து வேலை செய்யும் தலித்துகளும் கிராமத்தில் வாழும் வரை சாதியத்தின் நேரடி வன்முறையில் இருந்து தப்பிக்க முடிவதில்லை. இந்த நிலப்பரப்பில் பிராமணர்கள் இல்லை. அவர்கள் நகரத்துக்கு நகர்ந்து வேறொரு தளத்துக்கு சென்று விட்டார்கள்.
தலித்துகளுக்கு நேரடி வாழ்வில் பிராமணர்களுடன் புழங்குவதற்கோ உறவாடுவதற்கோ அவசியம் ஏற்படுவதில்லை. இதனால் அவர்களின் பிராமணர்கள் மீது கசப்பும் இல்லை.">தமிழகத்தில் பிராமணர்கள் தம்மை “கலாச்சார தலித்துகளாய்”, அரசியல் ஒடுக்குமுறை அனுபவிப்பவர்களாய் கருதுகிறார்கள். இதுவும் தலித் கூட்டணிக்கு ஒரு காரணாமாய் இருக்கலாம்.
;ஆனால் சாதி ஒழிப்பு என்பது மத்திய சாதி எதிர்ப்பு மட்டும் அல்ல என தலித்துகள் அறிவார்கள். இது ஒரு தற்காலிக கூட்டணி மட்டுமே. நியூஸ் செவன் பேட்டியில் ரஞ்சித் மகாபாரதம் பற்றி குறிப்பிடும் போது எப்படி ஒரு நாட்டார் கதையை இந்து மதம் தனது அதிகார பரவலாக்கத்துக்காக கையில் எடுத்தது என்பதை தொட்டு செல்கிறார்.
இன்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தெய்வங்களின் பின்புலம் பௌத்தத்தில் உள்ளது. அயோத்தி தாசர் இது குறித்து நுணுக்கமான ஆய்வுகளை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தலித்தியம் முழுக்க இந்து மதத்தை அடித்து நொறுக்க புறப்பட்டால் அப்போது பிராமணர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
இங்கு ஒரு பௌத்த மறுமலர்ச்சி ஏற்பட்டு இந்து மதம் நெருக்கடிக்கு உள்ளானால் பா.ஜ.க அப்போது தலித்துகளை எப்படி எதிர்கொள்ளும்?
ரஞ்சித் இந்து மதத்தின் மைய கடவுள் ஒன்றை தாக்கி ஒரு பௌத்த படம் எடுத்தால் அதை இப்போது அவரை கொண்டாடும் பிராமண நண்பர்கள் எப்படி கையாள்வார்கள்? அடுத்த அரை நூற்றாண்டில் இதற்கு விடை கிடைக்கலாம் thiruttusavi.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக