ஐ.நா வின் புதிய பொதுச்செயலராக அன்டோனியோ குட்டெரோஸ் பதவியேற்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஐ.நா வின் புதிய பொதுச்செயலராக அன்டோனியோ குட்டெரோஸ் பதவியேற்பு

ஐ.நா.வின் புதிய பொதுச் செயலராக அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை பதவியேற்றார்.
ஐ.நா.வின் தற்போதைய பொதுச் செயலரின் ஐந்தாண்டு பதவிக் காலம் டிசம்பர் இறுதியில் நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து, ஆங்கிலப் புத்தாண்டான 2017 ஜனவரி 1-ஆம் தேதி அடுத்த பொதுச் செயலராக அன்டோனியோ குட்டெரெஸ் பொறுப்பேற்பார்.
ஐ.நா. வழக்கப்படி, பதவியேற்பு நிகழ்ச்சி முன்கூட்டியே நடைபெற்றது.
ஐ.நா. பொதுக்குழுவின் தலைவராக செயல்பட்டு வரும் ஜான் வில்லியம் ஆஷ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட பொதுக் குழுவில் குட்டெரெஸ் நன்றி உரையாற்றினார். சிரியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது:
ஐ.நா. அமைப்பு அதிகாரிகள் பல்வேறு விவகாரங்களில் விரைந்து செயலாற்ற வேண்டும். வழிமுறைகளைக் காரணம் காட்டி, ஐ.நா.வின் முடிவுகளை செயல்படுத்துவதில் அதிகாரிகள் தாமதம் செய்யக் கூடாது. உலக அமைதியை உறுதி செய்வதில் ஐ.நா. பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது என்று நான் கூறுவேன். ஆனால் மாற்றத்துக்கு நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
ஐ.நா. சந்தித்து வரும் சவால்களை நான் நன்கு அறிவேன். பொதுச் செயலர் பதவிக்கு உள்ள கட்டுப்பாடுகளையும் நான் அறிவேன். அதனால்தான், வெறும் பொதுச் செயலர் என்ற பதவியில் காலம் கழிப்பதைக் காட்டிலும், ஒருங்கிணைப்பாளராகவும் பல்வேறு நாடுகள், அமைப்புகள், கருத்துகள் இடையே பாலமாக இருக்கவும் நான் விரும்புகிறேன்.
சிரியா முதல், யேமன், சூடான், இஸ்ரேல், பாலஸ்தீனம் உள்ளிட்ட இடங்களில் நீண்ட காலம் நிலவும் பிரச்னைகளைக் களைய, விவாதம், சமரசம் போன்ற நடவடிக்கைகள் மட்டும் அல்லாமல், புதிய சிந்தனை முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ஐ.நா. மூலம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை மேற்கொள்வேன் என்றார் அவர்.
போர்ச்சுகல் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்துள்ள அன்டோனியோ குட்டெரெஸ் (67), ஐ.நா.வின் ஒன்பதாவது பொதுச் செயலராக இருப்பார். ஐ.நா. அகதிகள் நல ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் என்ற வகையில், ஐ.நா.வின் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்தவர் அவர்.
தென் கொரியாவைச் சேர்ந்த பான் கி-மூன் ஐ.நா.வின் பொதுச் செயலராக இரு முறை பதவி வகித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here