காந்தியடிகள் வழிநடந்த தொண்டர்களாக இருந்த பலர், நாடு விடுதலை பெற்றபின் ஆட்சிப்
பொறுப்பில் அமர்ந்து மக்கள் பணி செய்த போதும் தங்கள் செயல்களில் நேர்மை தவறாமல் நடந்தனர். அத்தகைய தூயவர்களில் ஒருவராக, நாடு போற்றும் நல்லவராக விளங்கிய ஒருவர்தான் எளிமையின் இலக்கணம், தூய்மையின் இருப்பிடம் என்று போற்றப்பட்ட திரு. கக்கன் அவர்களாவார்.
எதிர்க்கட்சியினராலும் போற்றப்பட்டவரான திரு. கக்கன் 1957&இல் பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்மை, கால்நடை, தாழ்த்தப் பட்டோர் நலம், பொதுப்பணி ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்காமராஜர் பதவி விலகியபின் திரு. பக்தவத்சலம் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை, தொழிலாளர் நலத்துறை, அறநிலையத்துறை, தாழ்த்தப்பட்டோர் நலத்துறை எனப் பெரும் பொறுப்புகள் கொண்ட பல துறைகளின் அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார்.
பத்தாண்டுக் காலம் மாநில அமைச்சராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவராயினும் கறைபடியாத கைகளுக்குச் சொந்தக் காரராகவே செயல்பட்டதால், இறுதிவரை எளிய வாழ்க்கையே வாழ்ந்த சிறப்புக்குரியவர் கக்கன் அவர்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் 18.6.1909&இல் பிறந்தவர் திரு. கக்கன். இவரது தந்தையார் பூசாரிக்கக்கன். தாயார் குப்பி அம்மையார்.
இளமையிலேயே தன் தாயை இழந்தார் கக்கன். தனக்குச் சிற்றன்னையாக வந்த பிரம்பியம்மாள் என்னும் அம்மையாரால் வளர்க்கப் பட்டார்.
.
1962&இல் மீண்டும் அமைந்த காமராஜர் அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்
தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த துயரமான சூழ்நிலையில் ஏழ்மை, தீண்டாமைக் கொடுமை ஆகிய இடர்ப்பாடுகளுக்கிடையே எதிர்நீச்சல் போட்டுத் தொடக்கக் கல்வியைப் பயின்றார்.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மதுரை திருமங்கலத்திலும், மேலூரிலும், பசுமலையிலும் படித்தார். பள்ளி இறுதித் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி) ஆங்கிலப் பாடத்தில் வெறும் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் தோல்வியடைந்தார். மீண்டும் படித்தும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
கல்வி பயின்ற காலத்திலேயே நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களின் தொடர்பு ஏற்பட்டிருந்ததால், அவருக்குக் கல்வியில் தொடர்ந்து ஈடுபாடு ஏற்படவில்லை.
.
1934-இல் மதுரைக்கு வந்த காந்தியடிகள் கக்கனின் பொதுத் தொண்டுகளை அறிந்தார். அந்தச் சந்திப்பின்போது, காந்தியடிகளுடன் சுற்றுப்பயணம் செய்த கக்கன் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
இதன் காரணமாக, 1939&ஆம் ஆண்டு வைத்தியநாத ஐயர் மூலம் காங்கிரசில் இணைந்து பொதுத்தொண்டுகளுடன் விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.
அவர் போகுமிடமெல்லாம் வந்தே மாதரம் முழக்கமிட்டதற்காக 1940&இல் ஆங்கில அரசால் 15 நாள்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த 1940-இல்தான் அவர் மேலூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த தலைவர் கக்கன்தான் என்பது பெருமைக்குரிய ஒன்று. இந்தப் போராட்டத்திற்காகவும் ஒரு மாதச் சிறைத்தண்டனை பெற்றார்.
. முதலில் 1941-&42-இல் நடைபெற்ற மாவட்டக் கழக உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1946-இல் அரசியலமைப்புச் சட்டசபை உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.
நாட்டு விடுதலைக்குப்பின் 1952-இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1957 மற்றும் 1962 ஆகிய தேர்தல்களில் தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைச்சர் பொறுப்பேற்றுப் பல நற்பணிகளைச் செய்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் பணியாற்றினார். இவர் தலைவராக இருந்த போதுதான் 1955-இல் காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்திய மாநாட்டைச் சென்னையில் சிறப்புற நடத்தினார்.
1963&இல் காமராஜர் கட்சிப்பணிக்காக முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது, அடுத்த முதல்வராகக் கக்கனையே கொண்டுவர விரும்பினார் என்று கூறப்படுகிறது. ஆனால், திரு. பக்தவத்சலம் அவர்கள் முதல்வரானார். அவரது அமைச்சரவையில் நிதி, உள்துறை, கல்வி, சிறை, அறநிலையத்துறை, தொழிலாளர் நலம், தாழ்த்தப்பட்டோர் நலம் முதலிய பல பெரும் பொறுப்புகள் கொண்ட அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார் கக்கன்.
1967-இல் தி.மு.க. ஆட்சியமைத்த போது கக்கன் அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அத்துடன் அவரது அரசுப் பணிகள் முடிவுக்கு வந்தன. ஆனால், கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார்.
பத்தாண்டுக்காலம் அமைச்சர் பதவியில் இருந்தபோதும், அவருக்கென்று சொந்த வீடோ, வேறு சொத்துக்களோ வைத்திருக்கவில்லை. விடுதலைப் போரில் ஈடுபட்டமைக்காகத் தமக்குக் கிடைத்த சிறு நிலத்தையும் வினோபாவின் பூதான இயக்கத்திற்குக் கொடுத்து விட்டார்.
அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின் சொந்தமாக ஊர்தி ஏதுமில்லாததால், ஒரு முன்னாள் அமைச்சர் பேருந்துக்காகக் கால் கடுக்கக் காத்திருந்ததையும், வாடகை வீடு தேடி அலைந்ததையும், இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த போது மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகூட இல்லாமல் தரையில் படுத்துக் கிடந்ததையும், அதையறிந்த அன்றைய முதல்வர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தததையும் தமிழக மக்களில் பெரும்பாலோர் அறிவர். அதனால்தான் கக்கன் என்றாலே அவர் தூய்மையின் அடையாளமாக மதிக்கப் படுகிறார்.
அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.
மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தது, வைகை, பாலாறு உள்ளிட்ட பல அணைக்கட்டுத் திட்டங்களை நிறைவேற்றினார்,
விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான பணிகளைக் கூறலாம்.
அவர் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பணியாற்றிய போது அவை நடவடிக்கைகளில் தவறாது பங்கேற்பது இவருடைய சிறந்த பழக்கமாக இருந்தது. நேரம் தாழ்த்தாமல் அலுவலகத்திற்கு வருவதும், மக்கள் குறைகளைக் கேட்டு ஆவன செய்வதும் இவருடைய பண்பு நலன்களில் குறிப்பிடத்தக்கவை.
தீண்டாமை ஒழிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கக்கன் அதற்காகப் பல்வேறு செயல்களைச் செய்துள்ளார். அவரது ஊரான தும்பைப் பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீரெடுக்க ஒரு குளமும், பிற வகுப்பார் நீரெடுக்க ஒரு குளமும் இருந்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பார் நீரெடுக்கும் குளம் மக்கள் அசுத்தங்களைக் கழுவவும், ஆடு மாடுகளைக் குளிப்பாட்டவும் பயன்படுத்தப்பட்ட குளமாகும்.
இந்த இழிநிலையை எதிர்த்து ஒத்த கருத்துடைய பிற வகுப்பாருடன் இணைந்து போராடி, அனைவரும் ஒரே குளத்தில் குடி நீரெடுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவுப் போராட்டத்தை வைத்தியநாத ஐயருடன் சேர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939&இல் நடத்தித் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமையைப் பெற்றுத்தந்தார்.
கக்கன் இந்துவாக இருந்தாலும் கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த சொர்ணம் பார்வதி என்ற அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அதுவும் 1932&இலேயே சீர்திருத்தத் திருமணம் செய்தார். இந்தத் திருமணத்திற்குத் தலைமை தாங்கியவர் பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பா. ஜீவானந்தம் என்பது குறிப்பிடத் தக்கது.
இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார்.
அமைச்சர் பதவியிலிருந்த காலத்தில் தனது பதவியை அவர் ஒருமுறைகூட முறைகேடாகப் பயன்படுத்தியதில்லை. அரசு தனக்கு ஒதுக்கியிருந்த வீட்டில் தமது நெருங்கிய உறவினர்களைக்கூடத் தங்குவதற்கு அனுமதித்ததில்லை. அதே போல, அரசு தனக்குத் தந்த ஊர்தியில் தன் குடும்பத்தார் பயணம் செய்யவும் அனுமதித்ததில்லை.
இப்படிப்பட்டவர் வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பது நமக்குப் பெருமை. எதிர்காலத் தமிழகத்தை ஏற்றமுறச் செய்யவுள்ள இளைய தலைமுறைக்குக் கக்கனின் தூய பொதுவாழ்வு ஓர் எடுத்துக்காட்டு.
தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.
உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, ‘இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான். ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம். நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக்கொள்கிறேன்’ என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், ‘சிங்கிள் பெட்ரூம்’ வீட்டில் தங்கிக்கொண்டார்.
கக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன்.சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன். இதைக் கேட்டதுமே, ‘அப்படியா’ என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக ‘தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும். ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்’ என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன்.
எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்.
இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்:
எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை’
தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன்.
1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப்போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு வந்தார். அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார்.
அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு,
‘அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? ஐயா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: ‘ஐயா! அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா’ யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அந்த வார்டைக் காட்டுங்க’ என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார்.
மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்.
உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்.,
எதிரில் உள்ள நாற்காலி தானும் அமர்ந்தார். ‘தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்’ இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது.
கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும்?
சொல்லுங்க. உடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்’ என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, ‘அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்’ என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, ‘என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்’ என்று வணங்கி விடை பெற்றார்.
கக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது. ‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்’ என உத்தரவிட்டார் முதல்வர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆவன செய்தார்.
அதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-இல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன்.
கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க... ‘குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக