ஞா. தேவநேயப் பாவாணர் வாழ்க்கை வரலாறு
பிறப்பு: 07-02-1902 இறப்பு: 15.01.1981
“மொழிஞாயிறு” என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 1902ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி நெல்லை மாவட்டம், சங்கரநயினார் கோயிலில், ஞானமுத்தன் – பரிபூரணம் ஆகிய இருவருக்கும் பத்தாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் “தேவநேசன்”. இளம் பருவத்திலேயே தமது தாய் – தந்தையரை இழந்தார். ஐந்தாம் அகவையிலேயே கொடிய வறுமைக்கு ஆளானார். அதனால் தாயைப் பெற்ற தந்தையார் குருபாதம் என்பவரின் அரவணைப்பில் வளர்ந்தார். அவரது உதவியால் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஆம்பூர் மிசெளரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப்பள்ளியில் பயின்றார்.
பின்னர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திருச்சபை விடையூனியக் கூட்டுறவு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1921ம் ஆண்டு ஆசிரியப் பணிக்குச் செல்ல அவர் விரும்பியபோது, அவருக்கு, அவரது ஆசிரியர், பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை, “தேவநேசக் கவிவாணன்” என்று குறிப்பிட்டார். பின் அப்பெயரையே தம் பெயராகக் கொண்டார் பாவாணர். அவ்வாண்டிலேயே தாம் இளமையில் பயின்ற ஆம்பூர் நடுநிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வென்றார். “நேசன்” என்பதும் “கவி” என்பதும் வடசொற்கள் என்பதை அறிந்துகொண்ட பின்னர், தம் பெயரைத் “தேவநேயப் பாவாணர்” என அமைத்துக் கொண்டார்.
1926ம் ஆண்டு திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கம் நடத்திய தனித் தமிழ்ப் புலவர் தேர்வெழுதி அதில் வெற்றி பெற்றார். பின்னர் பி.ஓ.எல் தேர்வும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எழுதி வென்றார். எம்.ஓ.எல். பட்டம் பெறுவதற்கு “திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே” என்னும் பொருள் குறித்து இடுநூல் எழுதி, சென்னை பல்கலைக்கழகத்தில் அளித்தார். ஆனால் பாவாணரின் இந்நூலை பல்கலைக்கழகம் ஏற்கவில்லை.
பாவாணர் ஓரிடத்தில் நிலைத்து பணி செய்யவில்லை.
முகவை மாவட்டத்திலுள்ள சீயோன் மலை உயர்நிலை தொடக்கப்பள்ளியில் சிறிது காலம் பணியாற்றினார்
தஞ்சை மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பின்லே கல்விச்சாலையில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.
திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியிலும்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும்
சேலம் நகராண்மைக் கல்லூரியிலுமாகப் பற்பல இடங்களில் பணிபுரிந்தார்.
இஃது இவரது சொல்லாய்வுக்கு உறுதுணையாய் இருந்தது. வறுமை வாட்டியபோதும் வாழ்நாளெல்லாம் சொல்லாய்வுக்காக நூல்களை வாங்கிக் கொண்டிருந்தார்.
1974ம் ஆண்டு பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்குநராக இருந்தபோது, அவருக்கு மராட்டிய மொழி அகரமுதலி ஒன்று தேவையாய் இருந்தது. அப்போது மூர் அங்காடியில் இராசவேல் என்ற பழைய புத்தக வணிகரிடம் அந்நூல் இருந்தது. அந்த அகராதியைப் பாவாணர் அரசு பணத்தில் வாங்காது தமது பணத்திலேயே வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பன்மொழிப் புலவராகிய பாவாணர் வீட்டில் உலக மொழிகளில் உள்ள அனைத்து அகராதித் தொகுப்புகளும் இருந்தன. பாவாணர் தாமே முயன்று பல மொழிகளையும் கற்றார். திராவிட மொழிகள், இந்திய மொழிகள், உலகமொழிகள் ஆகியவற்றில் பெருமொழிகளாய் அமைந்த 23 மொழிகளைக் கற்று, அவற்றின் இலக்கண அறிவும் பெற்றவர் என அறிஞர் கூறுவர்.
சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியினை ஆராய்ந்து அதில், ஆயிரக்கணக்கான தென் சொற்கள் விடப்பட்டிருப்பதும், தமிழின் அடிப்படைச் சொற்களையெல்லாம் வடசொல்லென்று காட்டியிருப்பதும் தமிழ்ச் சொல் மறைப்பாகும் என பாவாணர் சுட்டிக்காட்டினார்.
காலமெல்லாம் பாவாணர் சொல் வழக்காறுகளைத் தொகுத்தார். அவர் தொகுத்த சொற்களஞ்சியச் செல்வத்தினைத் தாம் எழுதியவற்றில் வாரி வழங்கினார். எழுதுவது போலவே பேசுவார். அவர் நூல்கள் போலவே உரையாடலிலும் ஊடகமாகச் சொல்லாய்வு தலைதூக்கி நிற்கும். பாவாணரைப் பற்றி, “சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று யாம் உண்மையாகவே கருதுகின்றோம்,” என மறைமலையடிகளார் குறிப்பிடுகிறார்.
பலசொற்கள் வடமொழியில் இருந்தே வந்தது என்று பலர் கூறியபோது அதனை மறுத்து அவை தூயதமிழ்ச் சொற்களே என மெய்ப்பித்தவர் பாவாணர். “புத்தகம்” எனும் சொல் வடசொல்லில் இருந்து வந்ததாகக் கூறுவர். இதனை மறுத்து பாவாணர், “புத்தகம்” என்னும் சொல் “பொத்தகம்” என்பதன் வழிவந்த சொல்லாகும். அதாவது புல்லுதல் – பொருந்துதல், புல் – பொல் – பொரு – பொருந்து – பொருத்து – பொத்து – பொட்டு, பொத்துதல் – பொருத்துதல், சேர்த்தல், தைத்தல், மூட்டுதல், மூடுதல், பொத்து – பொத்தகம் – பொத்திய (சேர்த்தல்) ஏட்டுக்கற்றை, எழுதிய ஏட்டுத் தொகுதி என விளக்கி இஃது தூய தமிழ்ச்சொல் என்று மொழிகிறார்.
சொல்லாய்விற்காக அரும்பாடுபட்டவர் பாவாணர். “மொழியாராய்ச்சி” என்ற பாவாணரின் முதற்கட்டுரை, செந்தமிழ்ச்செல்வி ஜூன் – ஜூலை திங்களிதழில் 1931ம் ஆண்டு அவரது 29ம் அகவையில் வெளிவந்தது. “உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு” என்ற அவரது இறுதிக் கட்டுரை அதே இதழில் 1980ம் ஆண்டு டிசம்பர் திங்களில் வெளிவந்தது. இருப்பினும் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை நகரில் 1981ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தொடங்கியபோது வெளியிடப்பட்ட மலரில் இடம்பெற்றதும், பாவாணரால் மாநாட்டரங்கில் படிக்கப்பெற்றதும் ஆகிய கட்டுரை, “தமிழனின் பிறந்தகம்” என்னும் கட்டுரையாகும்.
மாநாட்டு அரங்கில் இக்கட்டுரைக்கு பாவாணர் விளக்கம் கூறிக்கொண்டிருக்கும்போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவரது 79ம் அகவையில் இயற்கை எய்தினார்.
தொகுப்புக் கலைத்தோன்றலாகிய பாவாணர் அகரமுதலிகளைத் தொகுப்பதில் பேரார்வம் கொண்டுழைத்தார். அப்பணி வளர்ந்து கொண்டே இருந்தது. அவரது மூச்சின் ஓய்வில்தான் அத்தொகுப்பு முடிவுற்றது. வாழ்நாளின் இறுதிவரை தமிழுக்காகவே வாழ்ந்தார். இதனை தமிழ்கூறும் நல்லுலகத்தார் அனைவரும் அறிவர். பாவாணர் அவரது தமிழ்ப்பணியை தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் நினைந்து, அவர்தம் வழியில் சென்று தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்ப்பதுடன், அதனைக் காப்பதும் அனைவரின் கடமையாகும்.
படிப்பும் பணிகளும்
912- தம் ஐந்தாம் அகவையில் பெற்றோரை இழந்தப் பாவாணர், வட ஆர்க்காடு மாவட்டம், ஆம்பூரில் மூத்த அக்காளான பாக்கியத்தாயின் பேணலில் வளர்ந்தார். சோழபுரம் விடையூழியப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், ஆம்பூரில் உள்ள மிசௌரி உலுத்தரின் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்ந்தார்.
916- பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக உயர்நிலைப்பள்ளியில்(C.M.S.) IV, V, VI ஆம் படிவங்கள் (இந்நாளில் 9, 10, 11 ஆகிய வகுப்புகள்) பயின்றார்.
1919- இராமநாதபுரம் மாவட்டம் முறம்பு என்னும் சீயோன் மலையில் உயர்தரப்பள்ளி ஒன்றை உருவாக்கி அதன் தாளாளராக இருந்த) யங் என்பவர் பணவுதவி செய்தார்; பின்பு தன் 17ம் அகவையில், 1919 ஆண்டு தாம் பயின்ற சீயோன் மலை உயர்தரப்பள்ளியிலேயே முதல் படிவ(ஆறாம் வகுப்பு) ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்..
1921- ஆம்பூர் உயர்நிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணிவுயர்வு பெற்றார்.(3 ஆண்டுகள்)
1924- மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத்தேர்வில் அவ் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஒரேயொருவர் தேவநேயர் என்ற சிறப்பும் பெற்றார்.’ஞா.தேவநேசக் கவிவாணன், மிசன் உயர்தரப் பாடசாலை, ஆம்பூர்,வடார்க்காடு ஜில்லா (மாவட்டம்)’ என்பது தேர்ச்சிக் குறிப்பு (செந்தமிழ் தொகுதி 22) சென்னை வருகை; பிரம்பூர் கலவல கண்ணன் செட்டி உயர்நிலைப்பள்ளி.
1925- சென்னை, திருவல்லிக்கேணி கெல்லற்று உயர்நிலைப்பள்ளி.
926- சென்னை, தாம்பரம் கிறித்தவ உயர்நிலைப்பள்ளி (மூன்றாண்டு) திருநெல்வேலிதென்னிந்திய தமிழ்ச்சங்கத் தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் அவ்வாண்டு தேர்ச்சியடைந்த ஒரேயொருவர் தேவநேயரே.(செந்.செல்.4:336);
சென்னைப் பல்கலைக்கழக வித்துவான், கீ.க. தேர்வு (B.O.L) என்னும் இளநிலைத் தேர்விலும் வெற்றி பெற்றார்;
எசுந்தர் அம்மையார் திருமணம்.ஈராண்டில் இயற்கை. ஒரு குழந்தை மணவாளன்;தத்தாகத் தரப்படுதல்.
1929 மன்னார்குடிப் பின்லேக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஆறாண்டு பணி; இக்காலகட்டத்தில், இராசகோபாலர் என்பவரிடம் முறையாக இசை பயின்றார்.
1930 தேவநேயர்-நேசமணியார் திருமணம்.
1931’ மொழியாராய்ச்சி’ – ஒப்பியன் மொழி நூல்’ என்னும் மொழியாய்வுக் கட்டுரை செந்தமிழ்ச் செல்வியில் வெளிவருதல்.
1934 திருச்சி பிசப் ஈபர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பது ஆண்டுகள் (1934-1943) பணிசெய்தார்.
1935- திரவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே என்னும் தலைப்பில் கீ.க.மு.(M.O.L.) பட்டத்திற்காக இடுநூல் சென்னைப் பல்கலைக்கழகத்தில்வழங்குதல்.
1936- இடுநூல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் தள்ளப்படுதல். ‘இனி எனது நூல்களையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்’ என உறுதிக் கொள்ளல்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
1940 – ஒப்பியன் மொழிநூலை வெளியிட்டார்
1943- சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி (ஓராண்டு). தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்பு (21.10.43). தொல்காப்பியக் குறிப்புரை வரைவு.
1944- சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்(பன்னீராண்டு) ஏந்தாக வாழ்தல்.
1947- பெரியார் வெள்ளிப் பட்டயம் வழங்கிப் பாராட்டல்.
1952- தமிழ் முதுகலைப் பட்டம்(M.A.) பெறுதல்.
12.07.1956அண்ணாமலைப் பல்கலைக்கழகம் – திரவிட மொழியாராய்ச்சித் துறை (ஐந்தாண்டு)
24.09.1961- காட்டுப்பாடியில் வாழ்வு.
27.10.1963- மனைவியார் நேசமணி அம்மையார் இயற்கை எய்துதல்.
12.01.1964- தமிழ்ப்பெருங்காவலர் விருது; தமிழ்க் காப்புக் கழகம்,மதுரை
06.10.1966- உ.த.க. தோற்றம்; திருச்சிராப்பள்ளி.
08.09.1967- மணி விழா, மதுரை.
28.12.1969- உ.த.க. முதலாண்டு விழா, பறம்புக்குடி
09.01.1971- உ.த.க. இரண்டாம் விழா, மதுரை.
12.02.1971- தென்மொழி, பாவாணர் அகரமுதலித் திட்டத் தொடக்கம்.
05.05.1971- குன்றக்குடி அடிகளார் பாரி விழாவில் ‘செந்தமிழ் ஞாயிறு’ விருது வழங்குதல்
31.12.1972தமிழன் பிறந்தகம் குமரிநாடே என்னும் தீர்மானிப்பு மாநாடு, தஞ்சை.
08.05.1974 – செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி த் திட்ட இயக்குநராக அமர்த்தம்.
15.01.1979- தமிழ்நாட்டு அரசு ‘செந்தமிழ்ச் செல்வர்’ விருது வழங்குதல்.
05.01.1981- மதுரை உலகத் தமிழ் மாநாட்டுப் பொதுநிலைக் கருத்தரங்கில், ‘மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்’ என்னும் பொழிவு. நெஞ்சாங்குலைத் தாக்குண்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுதல்.
14.01.1981- மீளவும் நெஞ்சாங்குலைத் தாக்கம்.
15.01.1981- இரவு 12.30க்கு இயற்கை எய்துதல்.
14.01.1981- சென்னை, கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம்.
இறுதி நாட்கள்
மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, “மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்” எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே 1981 சனவரி 16 பின்னிரவு (அதிகாலை) ஒரு மணிக்கு இயற்கை எய்தினார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
தமிழர்:
வரலாற்றால்,
உணர்ச்சியால்,
கொள்கையால்,
மொழியால்,
இலக்கியத்தால்
பிற இனத்தோரிடமிருந்து வேறுபட்டவர்கள்.
தேவநேயப்பாவாணர்
நினைவுதினம்
Jan15th
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக