அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்பின் நடவடிக்கையால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
*வாஷிங்டன்:*
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்று 10 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் அவர் வெளியிடும் அதிரடி அறிவிப்புகள் உலக நாடுகள் அனைத்தையும் கதிகலங்க செய்துள்ளன. 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் அமெரிக்காவுக்கு வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, இன்று வெளிநாட்டினர் ஆத்திரம் அவசரத்துக்கு கூட அமெரிக்காவுக்கு செல்ல முடியாத இறுக்கமான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
உலக அளவில் தொழில் செய்து வரும் பன்னாட்டு நிறுவனங்களும் கடுமையான பாதிப்பை சந்திக்கும் நிலையை டொனால்டு டிரம்ப் உருவாக்கி உள்ளார். இதனால் அமெரிக்காவில் உள்ள இந்த நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன. டொனால்டு டிரம்ப் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன.
டிரம்ப் உத்தரவு பிறப்பித்த உடனேயே அது அமலுக்கு வந்து விட்டதால் ஆங்காங்கே விமான நிலையங்களில் வெளிநாட்டினரை தடுத்து வைத்துள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைத்திருப்பதற்கு நியூயார்க், வெர்ஜினியா கோர்ட்டு களில் உடனடியாக வழக்கு தொடரப்பட்டு அதற்கு நீதிபதிகள் தடை உத்தரவுகளையும் பிறப்பித்து இருக்கிறார்கள். அமெரிக்காவின் 16 மாகாண அட்டர்னி ஜெனரல்கள் (அரசு வக்கீல்கள்) டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
வாஷிங்டனிலும், நியூயார்க் கிலும் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதிபர் மாளிகை முன்பும், நியூயார்க்கில் உள்ள டிரம்ப் வீட்டின் அலுவலகம் முன்பும் பல்லாயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். இது மட்டுமல்ல, நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் அவருக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் டிரம்ப்பின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர். எதிர்க்கட்சி மட்டுமல்ல, சொந்த கட்சியான குடியரசு கட்சி தலைவர்களே டிரம்புக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். 2008 தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவரும், தற்போதைய செனட் உறுப்பினருமான ஜான்மெக்கேன், குடியரசு கட்சியின் மற்றொரு உறுப்பினர் மெக்னால் ரன்டகி ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘டொனால்டு டிரம்ப் யாருடனும் உரிய ஆலோசனை கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகளை அறிவித்துள்ளார். அமெரிக்க அரசு, பாதுகாப்பு அமைப்பு, நீதிபதிகள், சர்வதேச பொறுப்பு அமைப்புகள், உள்துறை அமைப்புகள் என யாரிடமும் அவர் கலந்து ஆலோசிக்கவில்லை.
இவருடைய முடிவால் நாட்டுக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. உலக நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கும் நிலையை அவர் உருவாக்கி இருக்கிறார். இது ஒருவேளை 3-ம் உலகப் போர் மூளும் நிலையை உருவாக்கி விடுமோ? என அஞ்சுகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
இதே போன்ற கருத்தை குடியரசு கட்சி செனட் உறுப்பினர் கிறிஸ்மர்பியும் கூறி இருக்கிறார். அவர் கூறும் போது, குடியரசு கட்சி செனட் உறுப்பினர்களில் கணிசமானவர்கள் டிரம்ப் நடவடிக்கையை ஏற்கவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். எனவே, சொந்த கட்சியிலேயே டொனால்டு டிரம்ப் கடும் எதிர்ப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இது வரை அமெரிக்காவுக்கு பக்க பலமாக இருந்த நாடுகள் கூட டொனால்டு டிரம்ப்பின் நடவடிக்கையை எதிர்க்க ஆரம்பித்து விட்டன. பக்கத்து நாடான கனடா, மெக்சிகோ ஆகியவை டிரம்பின் நடவடிக்கையை கண்டித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக