வாஷிங்க்டன்: சிரியா, ஈரான் உள்ளிட்ட ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்து அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவின் படி வெளிநாட்டு பயணிகளை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று நியூயார்க், வெர்ஜினியா மாகாண நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
அமெரிக்க அதிபராக கடந்த 20-ஆம் தேதி டிரம்ப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் உடனடியாக சிரியாவைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய நிரந்தர தடை விதித்தும், ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய 120 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார்.
இது தவிர சிரியா உட்பட மேற்குறிப்பிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்கக்கூடாது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
டிரம்ப்பின் இந்த திடீர் உத்தரவு காரணமாக நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட அமெரிக்க விமான நிலையங்களில் நேற்று தரையிறங்கிய 300-க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை மீண்டும் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையா எதிர்த்து அமெரிக்க மனித உரிமை அமைப்பு சார்பில் நியூயார்க் மாகாண நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி டோன்லே, உத்தரவில் குறிப்பிட்டுள்ள 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளை நாடு கடத்தக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
இதேபோல் வெர்ஜினியா மாவட்ட நீதிமன்றத்திலும் தொடரப்பட்ட வழக்கில் அடுத்த 7 நாட்களுக்கு அகதிகள், சுற்றுலா பயணிகளை வெளியேற்ற தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோஷமிட்டனர். இதன் காரணமாக போராட்டம் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக